மாடித்தோட்டம் அமைப்பவர்களுக்கு 20 கிலோ இயற்கை உரம் இலவசம்
மாடித்தோட்டம் அமைப்பவர்களுக்கு 20 கிலோ இயற்கை உரம் இலவசம்; கீழ்வேளூர் பேரூராட்சி செயல் அலுவலர் அறிவிப்பு
சிக்கல்:
கீழ்வேளூர் பேரூராட்சி செயல் அலுவலர் குகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கீழ்வேளூர் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இந்த வார்டுகளில் வசிக்கும் பொதுமக்கள் வருகிற ஆடி மாதம் 1-ந் தேதி முதல் 32-ந் தேதிக்குள் வீட்டு தோட்டம் அல்லது மாடித்தோட்டம் அமைத்து அதை புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டால், அவர்களுக்கு உடனடியாக கீழ்வேளூர் பேரூராட்சியில் தயாரிக்கப்படும் இயற்கை உரம் 20 கிலோ வழங்கப்படும். இதில் முக்கிய நிபந்தனையாக மரபணு மாற்றம் செய்யப்படாத நாட்டு காய்கறிகள் மட்டுமே பயிரிட வேண்டும். வீட்டில் தயாரிக்கும் இயற்கை உரம் மட்டுமே இட வேண்டும். தூய்மை இந்தியா இயக்கம், நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் மற்றும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் ஆகியவற்றின் கீழ் விழிப்புணர்வு நடவடிக்கையாக வீடுகளில் இயற்கை உரம் தயாரிப்பதை ஊக்கப்படுத்தும் விதமாக இது அமையும். வீட்டு தோட்ட பராமரிப்பு என்பது உடலுக்கு எளிய உடற்பயிற்சி, மனதுக்கு புத்துணர்ச்சி தரும். மேலும் நமக்கு குறைந்த செலவில் காய்கறிகள் கிடைப்பதால் பண சேமிப்பு மற்றும் இயற்கை உரத்தில் விளையும் காய்கறிகள் உண்பதால் உடல் ஆரோக்கியம் மேம்படும். மருத்துவ செலவு குறையும் என்பதால் ஆடிப் பட்டம் தேடி விதை மரபை மீட்டெடுக்க, மரபணு மாற்றம் செய்யப்படாத நாட்டுக் காய்கறிகளை காக்க, இதில் கீழ்வேளூர் பேரூராட்சியில் வசித்து வரும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.