20 புதிய அரசு கலை-அறிவியல் கல்லூரிகள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 20 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை தொடங்கி வைத்து, உயர்கல்வித் துறையின் சார்பில் 152.01 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டிடங்களை திறந்து வைத்தார்.
20 புதிய அரசு கலை-அறிவியல் கல்லூரிகள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
Published on

சென்னை,

தமிழக அரசின் பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக அகில இந்திய அளவில் உயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதலிடம் வகித்து வருகிறது. 2021-22-ம் ஆண்டிற்கான உயர்கல்வித் துறையின் மானியக் கோரிக்கையின்போது, தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சீரான உயர்கல்வி வழங்குவதற்கும், மாணவர் சேர்க்கை விகிதாச்சாரத்தை அதிகப்படுத்துவதற்கும், விருதுநகர் மாவட்டம் திருச்சுழி, கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர், ஈரோடு மாவட்டம் தாளவாடி, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், நெல்லை மாவட்டம் மானூர், திருப்பூர் மாவட்டம் தாராபுரம், தர்மபுரி மாவட்டம் ஏரியூர், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர், வேலூர் மாவட்டம் சேர்க்காடு ஆகிய இடங்களில் புதிதாக 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.

2022-23-ம் ஆண்டிற்கான உயர்கல்வித் துறையின் மானியக் கோரிக்கையின்போது, திருச்சி மாவட்டம் மணப்பாறை, விழுப்புரம் மாவட்டம் செஞ்சி, கிருஷ்ணகிரி மாவட்டம் தளி, புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், ஈரோடு மாவட்டம் அந்தியூர், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி, திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம், கடலூர் மாவட்டம் வடலூர், காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இடங்களில் புதியதாக 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

அதன்படி அந்த 20 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2022-2023-ம் கல்வியாண்டு முதல் மாணவ, மாணவியர்கள் சேர்க்கை நடைபெற்று பயன்பெறும் வகையில், அனைத்து வசதிகளுடன் கூடிய தற்காலிக கட்டிடங்களில் 20 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலமாக 7-ந் தேதி (நேற்று) முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

கல்விக் கட்டிடங்கள்

மேலும், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி அரசு கலைக் கல்லூரியில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைகள், ஆய்வகக் கட்டிடங்கள்; சென்னை வெலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைகள் மற்றும் ஆய்வகக் கட்டிடங்கள்; சைதாப்பேட்டை, கல்வியியல் மேம்பாட்டு நிறுவன வளாகத்தில் கட்டப்பட்டுள்ள கல்லூரிக் கல்வி இயக்ககம் மற்றும் சென்னை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்ககத்திற்கான ஒருங்கிணைந்த நிர்வாகக் கட்டிடம்;

சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரியில் கட்டப்பட்டுள்ள முதுநிலை மாணவ, மாணவிகளுக்கான விடுதிக் கட்டிடங்கள், சென்னை பல்கலைக்கழகத்தில் கட்டப்பட்டுள்ள உடற்பயிற்சிக் கூடம்;

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ஆ.கோவிந்தசாமி அரசு கலைக் கல்லூரி, கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக் கல்லூரி, கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஓசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பர்கூர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியவற்றில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைகள் மற்றும் ஆய்வகக் கட்டிடங்கள்;

கலையரங்கம்

தர்மபுரி மாவட்டம் பூமாண்டஅள்ளி - பெரியார் பல்கலைக்கழகத்தில் கட்டப்பட்டுள்ள முதுகலை பட்டப்படிப்பு விரிவாக்க மையம்; காரிமங்கலம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பாலக்கோடு பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தர்மபுரி அரசு கலைக் கல்லூரி, வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு திருமகள் கலைக் கல்லூரி, வேலூர் முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரி, ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அறிஞர் அண்ணா அரசு மகளிர் கலைக் கல்லூரி ஆகியவற்றில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைகள் மற்றும் ஆய்வகக் கட்டிடங்கள்;

நீலகிரி மாவட்டம், உதகமண்டலம் அரசு கலைக் கல்லூரி, சேலம் அரசு ஆடவர் கலைக் கல்லூரி, சேலம் அரசு மகளிர் கலைக் கல்லூரி ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் கழிவறைகள்; சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் கட்டப்பட்டுள்ள திறன் மேம்பாடு, அடைகாப்பு மற்றும் தொழில் முனைவோர் மையங்கள், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கட்டிடங்கள், மாணவ, மாணவிகளுக்கான விடுதிக் கட்டிடங்கள் மற்றும் இதர கட்டிடங்கள்;

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் கட்டப்பட்டுள்ள அறிவியல் கருவியாக்க மையம், தொழில் முனைவோர் புதுமை மையம், கலையரங்கம் கல்விசார் மற்றும் நிர்வாகக் கட்டிடங்கள்;

குடியிருப்பு கட்டிடங்கள்

அரியலூர் அரசு கலைக் கல்லூரி, மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசு மகளிர் கலைக் கல்லூரி, கடலூர் மாவட்டம் சிதம்பரம் அரசு கலைக் கல்லூரி, திருவாரூர் திரு.வி.க அரசு கலைக் கல்லூரி, சிவகங்கை மாவட்டம் பூலாங்குறிச்சி வ.செ.சிவ அரசு கலைக் கல்லூரி, காரைக்குடி-அழகப்பா அரசு கலைக் கல்லூரி, சிவகங்கை அரசு மகளிர் கலைக் கல்லூரி, சிவகங்கை ராஜா துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரி ஆகியவற்றில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைகள் மற்றும் ஆய்வகக் கட்டிடங்கள்;

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் கட்டப்பட்டுள்ள 8 கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள்; திண்டுக்கல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் கட்டப்பட்டுள்ள துணைவேந்தர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கான குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் பணியாளர் குடியிருப்பு கட்டிடங்கள்; மதுரை மாவட்டம் மேலூர் அரசு கலைக் கல்லூரியில் கட்டப்பட்டுள்ள 8 கூடுதல் வகுப்பறைகள்;

மகளிர் விடுதி

கீழக்குயில்குடி அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகத்தில் கட்டப்பட்டுள்ள ஹைட்ராலிக்ஸ் ஆய்வகம், உலோகவியல் ஆய்வகம் மற்றும் சுற்றுசுவர்;

நெல்லை ராணி அண்ணா அரசு மகளிர் கலைக் கல்லூரியில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள்; நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கட்டப்பட்டுள்ள ஆடவர் விடுதிக்கான உணவகத்துடன் கூடிய நவீன சமையல் அறை மற்றும் கருவியாக்க மையம்;

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கட்டப்பட்டுள்ள மகளிர் விடுதிக் கட்டிடம் என மொத்தம் 152 கோடியே 1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயர்கல்வித்துறை கட்டிடங்களை முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலகத்திலிருந்து அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு, க.பொன்முடி, மு.பெ.சாமிநாதன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உள்பட அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com