சிறைபிடிக்கப்பட்டுள்ள நடிகையை மீட்கக்கோரி வழக்கு ஐகோர்ட்டில் திங்கட்கிழமை விசாரணை


சிறைபிடிக்கப்பட்டுள்ள நடிகையை மீட்கக்கோரி வழக்கு ஐகோர்ட்டில் திங்கட்கிழமை விசாரணை
x
தினத்தந்தி 26 July 2019 9:48 PM GMT (Updated: 26 July 2019 9:48 PM GMT)

சட்டவிரோதமாக சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ள நடிகையை மீட்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக் கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை, 

சட்டவிரோதமாக சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ள நடிகையை மீட்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக் கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு திங்கட்கிழமை விசாரணைக்கு வருகிறது.

ஆட்கொணர்வு மனு

சென்னை ஐகோர்ட்டில், பெருங்களத்தூரை சேர்ந்த ஷமன் மித்ரு என்பவர் தாக்கல் செய்துள்ள ஆட்கொணர்வு மனுவில் கூறியிருப்பதாவது:-

‘ஷமன் பிக்சர்ஸ்’ என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் பங்குதாரராக உள்ளேன். இந்த நிறுவனம், ‘தொரட்டி’ என்ற பெயரில் திரைப்படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தின் கதாநாயகனாக நான் நடித்துள்ளேன். கதாநாயகியாக பொள்ளாச்சியை சேர்ந்த சத்தியா என்ற சத்தியகலா (வயது 26) என்பவர் நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது, அனைவருடனும் சத்தியகலா நட்பாக பழகினார். அப்போது, தன் இளம் வயதிலேயே தாயார் இறந்து விட்டதாகவும், தன் தந்தை 2-வது திருமணம் செய்து கொண்டதாகவும், தன்னுடன் பிறந்தவர்கள் யாரும் இல்லாததால் தனிமையில் வாழ்வதாக வருத்தப்பட்டு என்னிடம் கூறினார். திரைப்படத்தில் நடிப்பது தன் தந்தைக்கும், அவரது 2-வது மனைவிக்கும் பிடிக்கவில்லை என்று பலரிடம் கூறியுள்ளார்.

நடிகை சிறைபிடிப்பு

இந்தநிலையில், தொரட்டி திரைப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து, வருகிற ஆகஸ்டு 2-ந்தேதி வெளியிட முடிவு செய்துள்ளோம். இதுகுறித்து பத்திரிகையாளருக்கு கடந்த 22-ந்தேதி பேட்டி அளிக்க முடிவு செய்து, அதற்காக திரைப்படத்தில் பணியாற்றிய நடிகர்கள் உள்பட அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், சத்தியகலா மட்டும் வரவில்லை. அவரை, அவரது தந்தையும், 2-வது மனைவியும் சட்டவிரோதமாக சிறைபிடித்து வைத்துள்ளனர்.

இதுகுறித்து கோவை மாவட்டம், மகாலிங்கபுரம் போலீசில் கடந்த 25-ந்தேதி புகார் செய்தேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சட்டவிரோதமாக பிடித்து வைக்கப்பட்டுள்ள சத்தியகலாவை மீட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்த மகாலிங்கபுரம் போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அவசர வழக்கு

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கவேண்டும் என்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.நிர்மல்குமார் ஆகியோர் முன்பு மனுதாரர் தரப்பு வக்கீல் இந்து கருணாகரன் கோரிக்கை விடுத்தார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மனுவை வருகிற 29-ந்தேதி (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உத்தரவிட்டனர்.

Next Story