கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பு; அரசு ஆஸ்பத்திரிகளுக்கு கூடுதல் வசதிகள் செய்து தர வேண்டும்; பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு


கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பு; அரசு ஆஸ்பத்திரிகளுக்கு கூடுதல் வசதிகள் செய்து தர வேண்டும்; பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு
x
தினத்தந்தி 12 April 2021 1:31 AM GMT (Updated: 12 April 2021 1:31 AM GMT)

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அரசு ஆஸ்பத்திரிகளுக்கு கூடுதல் வசதிகள் செய்து தர அனைத்து மாவட்டங்களில் உள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

மருத்துவ துறைக்கான வசதிகள்
கொரோனா வைரஸ் நோய் தொற்றுக்காக சிகிச்சை அளிப்பதற்காக தமிழகத்தில் 29 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், 163 அரசு தலைமை ஆஸ்பத்திரிகள், 221 தாலுகா ஆஸ்பத்திரிகள் உள்ளிட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிறப்பு சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த ஆஸ்பத்திரிகளுக்கு கூடுதல் படுக்கைகள், ஆக்சிஜன் குழாய் இணைப்பு, குடிநீர், மின்சாரம், கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளை கடந்த ஆண்டு பொதுப்பணித்துறை சார்பில் மருத்துவ துறைக்கு செய்து தரப்பட்டு உள்ளது. இந்தநிலையில் கொரோனாவின் முதல் அலை முடிந்ததும் நோயின் தாக்கம் குறைந்து சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை ஆண்டு தொடக்கத்தில் குறைந்து காணப்பட்டது.

நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
தற்போது கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் மாவட்ட ஆஸ்பத்திரிகளுக்கு தற்போது வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் படிப்படியாக உயர்ந்து வருகிறது. இதனால் மருத்துவத்துறைக்கு தேவையான வசதிகளை செய்து தருவதற்காக, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பொதுப்பணித்துறையின் தலைமை அலுவலகத்தில் இருந்து அனைத்து மாவட்டங்களில் உள்ள பொதுப்பணித்துறையின் மாவட்ட தலைமை பொறியாளர் மற்றும் செயற்பொறியாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.அதில், ‘மருத்துவத்துறையின் தேவைக்கு ஏற்ப மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள் உள்ளிட்ட அரசு கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து ஆஸ்பத்திரிகளுக்கு வேண்டிய வசதிகளை செய்து தர தயார் நிலையில் இருக்க வேண்டும். அத்துடன் தற்போது என்னென்ன வசதிகள் உள்ளது. நவீனப்படுத்துவதற்காக தேவையான பொருட்கள் மற்றும் பணியாளர்களையும் தயார் நிலையில் வைத்திருக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

அவசர பணிக்கு முன்னுரிமை
கடந்த ஆண்டு மருத்துவமனைகளில் ரூ.73 கோடி மதிப்பில் படுக்கைகளில் ஆக்சிஜன் குழாய்கள் இணைப்பும், ரூ.74 கோடி மதிப்பில் மருத்துவமனைகளில் உள்ள வார்டுகள் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறும் வார்டுகளாகவும் மாற்றப்பட்டு உள்ளது. ஆண்டு தொடக்கத்தில் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டதால் படுக்கைகளும் வெறிச்சோடி காணப்பட்டது. ஆனால் தற்போது எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டி உள்ளது.அத்துடன் மாவட்ட அளவிலான அதிகாரிகள் கொண்ட குழுவினர் ஒருங்கிணைந்து பணிகளை செய்ய வேண்டும். இதுகுறித்த அறிக்கையையும் பொதுப்பணித்துறையின் தலைமை அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

குறிப்பாக மருத்துவ துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவ கல்லூரி டீன்களை கலந்து ஆலோசித்து அவர்கள் கூறும் பணிகளை உடனுக்குடன் முடித்து தர வேண்டும். குறிப்பாக மருத்துவமனைகளில் செய்ய வேண்டிய அவசர வேலைகளுக்கு முன்னுரிமை அளித்து உடனுக்குடன் செய்து தரப்பட வேண்டும் என்று கோரி சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.தற்போது பொதுப்பணித்துறை ஏற்கனவே அமைத்து தந்துள்ள படுக்கைகள், ஆக்சிஜன் குழாய் இணைப்பு மற்றும் மின்சார இணைப்புகள் போன்றவற்றை பராமரித்து வருகிறது. எத்தனை நோயாளிகள் வந்தாலும் அவர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்துதர பொதுப்பணித்துறை தயார் நிலையில் உள்ளது.

மேற்கண்ட தகவல்களை பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Next Story