மாநில செய்திகள்

மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து 'கொரோனாவை தோற்கடிக்க இணைந்து செயல்படுவோம்' + "||" + PM Modi congratulates MK Stalin 'Let's work together to defeat Corona'

மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து 'கொரோனாவை தோற்கடிக்க இணைந்து செயல்படுவோம்'

மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து 'கொரோனாவை தோற்கடிக்க இணைந்து செயல்படுவோம்'
தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றதற்காக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, கொரோனாவை தோற்கடிக்க இணைந்து செயல்படுவோம் என்று கூறியுள்ளார்.
சென்னை, 

பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டர் மூலமாக மு.க.ஸ்டாலினுக்கு தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-

‘தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதற்காக உங்களுக்கு (மு.க.ஸ்டாலின்) வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன். தேசத்தின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும், பிராந்திய மக்களின் எண்ணங்களை நிறைவேற்றுவதற்கும், கொரோனா பெருந்தொற்றை தோற்கடிப்பதற்கும் நாம் இணைந்து செயல்படுவோம்.’

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பிரதமரின் வாழ்த்துக்கு பதில் அளித்து மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:-

‘உங்களுடைய வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி. மாநில மக்களின் எண்ணங்களை நிறைவேற்றுவதற்கு மத்திய அரசுடன் இணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்கி நான் காத்திருக்கிறேன். கூட்டாட்சி ஒத்துழைப்பு மூலம் கொரோனாவை நாம் வென்றுவிடுவோம் என்று நான்உறுதியாக நம்புகிறேன். மேலும் தொற்றுநோய்க்கு பிந்தைய வளர்ச்சிப்பாதையை உருவாக்குவோம்.’

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதற்காக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சர்வதேச மற்றும் அகிலஇந்திய அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

நிர்மலா சீதாராமன்-ராகுல்காந்தி

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்:- தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதற்காக மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். மக்கள் சேவையில் உங்களுக்கு நல்ல பதவிக்காலமாக அமையவேண்டும் என்று வாழ்த்துகிறேன். ஸ்டாலினுக்கும், தி.மு.க.வுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி:- தேர்தல் வெற்றிக்காக மு.க.ஸ்டாலினை பாராட்டுகிறேன். தமிழக மக்கள் மாற்றத்துக்காக வாக்களித்திருக்கிறார்கள். அந்த நோக்கத்துக்காக, நாங்கள், உங்கள் தலைமையின் கீழ் நம்பிக்கையாக இருப்பதை நிரூபிப்போம்.

ராஜ்நாத் சிங் - கெஜ்ரிவால்

மு.க.ஸ்டாலினுக்கு, ராஜ்நாத் சிங் தெரிவித்த வாழ்த்து செய்தியில், ‘‘தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. பெற்றிருக்கும் வெற்றிக்காக, அதன் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுதல்களை தெரிவித்துக்கொள்கிறேன். மு.க.ஸ்டாலினுக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.

மு.க.ஸ்டாலினுக்கு, அரவிந்த் கெஜ்ரிவால் அனுப்பிய வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

தமிழக சட்டசபை தேர்தலில் மாபெரும் வெற்றியை பெற்றதற்காக மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். அவருக்கு இது வெற்றிகரமான பதவிக்காலமாக அமையவேண்டும் என்றும், தமிழக மக்களின் எண்ணங்களை நிறைவேற்றுவதில் மிகச்சிறந்த பங்களிப்பினை கொடுப்பதாக இருக்கவேண்டும் என்றும் நான் வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சரத் பவார்-நாராயணசாமி

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார்:- உங்களுடைய வெற்றிக்கு வாழ்த்துகிறேன். இது உண்மையிலேயே தகுதியான வெற்றி. உங்களிடம் நம்பிக்கையைத் தூண்டிய மக்களுக்கு சேவை செய்ய வாழ்த்துகள்.

புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி:- தமிழகசட்டசபை தேர்தலில் உங்களுடைய தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றதற்காக என்னுடைய இதயங்கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். உங்களுடைய தலைமையில் தமிழகம் வளர்ச்சி பெறும் என்று உறுதியாக நம்புகிறேன்.

ஹேமந்த் சோரன்-சந்திரபாபு நாயுடு

ஜார்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன்:- தமிழக சட்டசபை தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்றதற்காக மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். உங்களுடைய பதவிக்காலம் தமிழக மக்களின் எண்ணங்களைப் பூர்த்தி செய்து, வெற்றிகரமானதாக அமைய வாழ்த்துகிறேன்.

ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு:- தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றிவாகை சூடிய மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

லாலு பிரசாத் யாதவ்-ராஜ் தாக்கரே

பீகார் முன்னாள் முதல்-மந்திரியும், ராஷ்டிரிய ஜனதா கட்சி தலைவருமான லாலு பிரசாத்:- சட்டசபை தேர்தலில் பெரிய வெற்றியை பெற்றதற்காக மு.க.ஸ்டாலினை வாழ்த்துகிறேன். கருணாநிதி வழியில் நீங்களும் சமூக நீதியை எடுத்துச் சென்று திராவிட சகோதர, சகோதரிகளின் விருப்பத்துக்கு உயிரோட்டம் கொடுப்பீர்கள் என நம்புகிறேன்.

மராட்டிய நவநிர்மாண் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே:- தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ள மு.க.ஸ்டாலின் மற்றும் அவருடைய குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

உமர் அப்துல்லா

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி உமர் அப்துல்லா வெளியிட்ட வாழ்த்து செய்தியில், “தமிழகத்தில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதற்காக மு.க.ஸ்டாலினை வாழ்த்துகிறேன். உங்களுடைய தலைமையில் அடுத்த 5 ஆண்டுகள் அமைய உள்ள ஆட்சியில், தமிழக மக்கள் சிறப்பான பயனை பெறுவார்கள்” என்று கூறியுள்ளார்.

டக்ளஸ் தேவானந்தா-டத்தோஸ்ரீ எம்.சரவணன்

இலங்கை மந்திரி டக்ளஸ் தேவானந்தா:- தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெற்றிக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இலங்கை உடனான இந்திய மீனவர்களின் கடல் தொழில் விவகாரத்துக்கு நிரந்தர தீர்வை காண்பதற்கு முதல்-அமைச்சராக பதவி ஏற்கவுள்ள ஸ்டாலினின் பூரண ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறேன்.

மலேசிய இந்தியர் காங்கிரஸ் தேசியத் துணைத்தலைவரும், மலேசிய மனிதவள மந்திரியுமான டத்தோஸ்ரீ எம்.சரவணன்:- தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று புதிய முதல்-அமைச்சராக பொறுப்பேற்க உள்ள தி.மு.க.வின் தலைவர், கருணாநிதியின் இளவல், எனது அன்பு சகோதரர் ஸ்டாலினுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். வளரட்டும் தமிழகம், தொடரட்டும் கலைஞரின் சகாப்தம்.

சுக்பீர் சிங் பாதல்-அகிலேஷ் யாதவ்

மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி, சிரோமணி அகாலி தள தலைவர் சுக்பீர் சிங் பாதல், குஜராத் முன்னாள் முதல்-மந்திரி சங்கர்சிங் வகேலா, உத்தரப்பிரதேச முன்னாள் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் ஆனந்த் சர்மா, தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி. சுப்ரியா சுலே,

முன்னாள் மத்திய மந்திரி ஹர்சிம்ரத் கவுர் பாதல், ரயிஸ் சேக் எம்.பி., தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மராட்டிய மந்திரி நவாப் மாலிக், சமாஜ்வாடி கட்சி செய்தித்தொடர்பாளர் ஜூஹி சிங், சுனில் தட்கரே எம்.பி., சரத் யாதவ் எம்.பி., ரேவந்த் ரெட்டி எம்.பி., பீகார் மாநில எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ், இந்திய ஹஜ் அசோ சியசேன் தலைவர் பிரசிடெண்ட் அபுபக்கர் ஆகியோரும் மு.க.ஸ்டாலினுக்கு டுவிட்டர் மூலமாக வாழ்த்து தெரிவித்துள்ளனர். தனக்கு வாழ்த்துகளை தெரிவித்தவர்கள் அனைவருக்கும் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. மம்தா பானர்ஜி, பினராயி விஜயனுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து
மம்தா பானர்ஜி, பினராயி விஜயனுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து.
2. மு.க.ஸ்டாலின் மே தின வாழ்த்து
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள மே தின வாழ்த்து செய்தியில், ‘‘தி.மு.க. ஆட்சியில் தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்கான திட்டங்கள் தொய்வின்றி நிறைவேற்றப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.
3. மக்களுடன் தொடர்பிலேயே இருக்க வேண்டும் கொரோனா சூழல் தொடர்பான கருத்துகளை மக்களிடம் கேட்டறியுங்கள் - மத்திய மந்திரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்
மக்களுடன் தொடர்பிலேயே இருக்குமாறும், கொரோனா சூழல் குறித்து அவர்களிடம் கருத்துகளை கேட்டறியுமாறும் மத்திய மந்திரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார்.
4. “மிசோரம் காட்டுத்தீயை அணைக்க அனைத்து விதங்களிலும் உதவுவோம்”; பிரதமர் மோடி உறுதி
மிசோரம் மாநில முதல்-மந்திரி சோரம்தங்காவிடம், பிரதமர் நரேந்திரமோடி நேற்று தொடர்பு கொண்டு பேசினார்.
5. தடுப்பூசி தொடர்பான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்: பிரதமர் மோடி
தற்போது அமலில் இருக்கும் இலவச தடுப்பூசி திட்டம் இனி வரும் காலங்களிலும் தொடரும் என பிரதமர் மோடி கூறினார்.