கொரோனா ஊரடங்கு புதிய கட்டுப்பாடுகளை கண்காணிக்க தமிழகம் முழுவதும் 10 ஐ.பி.எஸ். அதிகாரிகள் நியமனம் போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி உத்தரவு


கொரோனா ஊரடங்கு புதிய கட்டுப்பாடுகளை கண்காணிக்க தமிழகம் முழுவதும் 10 ஐ.பி.எஸ். அதிகாரிகள் நியமனம் போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி உத்தரவு
x
தினத்தந்தி 5 May 2021 7:21 PM GMT (Updated: 5 May 2021 7:21 PM GMT)

கொரோனா ஊரடங்கு புதிய கட்டுப்பாடுகளை கண்காணிக்க தமிழகம் முழுவதும் 10 ஐ.பி.எஸ். அதிகாரிகளை போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி நியமித்துள்ளார்.

சென்னை, 

தமிழகத்தில் கொரோனா 2-வது அலையை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையாக இன்று (வியாழக்கிழமை) முதல் வருகிற 20-ந் தேதி வரையில் தீவிர கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது.

இந்த கட்டுப்பாடுகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா? என்பதை கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்காக தமிழகம் முழுவதும் 10 ஐ.பி.எஸ். அதிகாரிகள் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

எம்.சி.சாரங்கன்

இதுகுறித்து தமிழக போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி வெளியிட்ட சுற்றறிக்கையில் இடம் பெற்ற அதிகாரிகள் விவரம் வருமாறு:-

சென்னை நகரத்துக்கு கண்காணிப்பு அதிகாரியாக போலீஸ் ஐ.ஜி. (தலைமையகம்) எச்.எம்.ஜெயராமும், திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ஐ.ஜி. (பயிற்சியகம்) எம்.சி.சாரங்கனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்கள் உள்ளடங்கிய வேலூர் மண்டல கண்காணிப்பு அதிகாரியாக ரெயில்வே ஐ.ஜி. வனிதாவும்,

விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்கள் அடங்கிய விழுப்புரம் மண்டல கண்காணிப்பு அதிகாரியாக விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. எம்.பாண்டியனும் நியமிக்கப்படுகிறார்கள்.

தினகரன்

சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டங்கள் உள்ளடங்கிய சேலம் மண்டல கண்காணிப்பு அதிகாரியாக தலைமையக ஐ.ஜி. ஆர்.தினகரனும், திருப்பூர், கோவை, ஈரோடு, நீலகிரி மாவட்டங்கள் உள்ளடங்கிய கோவை மண்டல கண்காணிப்பு அதிகாரியாக தொழில்நுட்ப சேவை பிரிவு ஐ.ஜி. சஞ்சய் குமாரும்,

திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கரூர் மாவட்டங்கள் உள்ளடங்கிய திருச்சி மண்டல கண்காணிப்பு அதிகாரியாக தொழில்நுட்ப சேவை பிரிவு கூடுதல் டி.ஜி.பி. அமரேஷ் பூஜாரியும் நியமிக்கப்படுகிறார்கள்.

எஸ்.முருகன்

தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்கள் உள்ளடங்கிய தஞ்சை மண்டல கண்காணிப்பு அதிகாரியாக தலைமையக ஐ.ஜி. ஜே.லோகநாதன்,

மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்கள் உள்ளடங்கிய மதுரை மண்டல கண்காணிப்பு அதிகாரியாக சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு கூடுதல் டி.ஜி.பி. சைலேஷ்குமார் யாதவ்,

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்கள் உள்ளடங்கிய நெல்லை மண்டல கண்காணிப்பு அதிகாரியாக நவீனப்படுத்துதல் பிரிவு ஐ.ஜி. எஸ்.முருகன் ஆகியோரும் நியமிக்கப்படுகிறார்கள்.

தீவிர கண்காணிப்பு

இந்த கண்காணிப்பு அதிகாரிகள் அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் தீவிரமாக கண்காணித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அந்த மாவட்டங்களில் கொரோனா கள நிலவரம் குறித்து அறிக்கை அளிக்க வேண்டும். குறிப்பாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story