கொரோனா பெருந்தொற்றினை கட்டுப்படுத்த அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்; அமைச்சர் பி.கே.சேகர் பாபு வேண்டுகோள்


கொரோனா பெருந்தொற்றினை கட்டுப்படுத்த அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்; அமைச்சர் பி.கே.சேகர் பாபு வேண்டுகோள்
x
தினத்தந்தி 15 May 2021 5:45 PM GMT (Updated: 15 May 2021 5:45 PM GMT)

கொரோனா பெருந்தொற்றினை கட்டுப்படுத்த அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆய்வு கூட்டம்

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட செனாய் நகரில் உள்ள அண்ணாநகர் மண்டல அலுவலகத்தில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.இதில் தயாநிதிமாறன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அ.வெற்றிஅழகன், இ.பரந்தாமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசியதாவது:-

கூடுதல் சிகிச்சை மையங்கள்

அண்ணாநகர் மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா பாதுகாப்பு மையங்களையும், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையங்களையும் அதிகரிக்க வேண்டும். தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவியோடும் புதிய மையங்களை அமைக்க முயற்சி எடுக்க வேண்டும். வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களுக்கு மாநகராட்சி பணியாளர்கள் மூலமோ அல்லது தன்னார்வலர்களின் மூலமோ அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களுக்கு தேவையான அனைத்து விதமான மருத்துவ மற்றும் அடிப்படை தேவைகளை உடனுக்குடன் வழங்க தேவையான அளவுக்கு தன்னார்வலர்களை நியமிக்க வேண்டும்.

கொரோனா பாதுகாப்பு மற்றும் சிகிச்சை மையங்களை நகரத்துக்கு வெகு தொலைவில் அமைக்காமல் முடிந்தவரை மாநகராட்சியின் மையப்பகுதியில் அமைக்க வேண்டும். கொரோனா சிகிச்சை மையங்கள் அல்லது வீடுகளில் இருந்து தொற்று பாதிப்பு தீவிரமடைந்த நிலையில் ஆம்புலன்ஸ் வாகனங்களில் அழைத்துச் செல்லப்படும் நோயாளிகளுக்கு அந்த ஆம்புலன்ஸ் வாகனங்களில் ஆக்சிஜன் வசதி சரியான முறையில் உள்ளதா? என்பதையும் சம்பந்தப்பட்ட சுகாதார அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.

களப்பணியில் எம்.எல்.ஏக்கள்

அண்ணாநகர் மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 45 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் 50.67 சதவீதம் பேர் உள்ளனர். தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத 45 வயதிற்கு மேற்பட்ட நபர்களின் விவரங்களை கண்டறிந்து அவர்களுக்கும் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, அச்சத்தைப்போக்கி தடுப்பூசி மையங்களுக்கு அழைத்துவந்து தடுப்பூசி செலுத்த வேண்டும்.

நாள்தோறும் வார்டு அலுவலகங்களில் களப்பணியாளர்கள் மற்றும் இதர மாநகராட்சி பணியாளர்களுடன் அலுவலர்கள் மேற்கொள்ளும் காலை ஆலோசனை கூட்டத்தில் சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொண்டு களப் பணியாளர்களின் பணிகளை ஆய்வு மேற்கொள்வார்கள்.

மக்கள் ஒத்துழைப்பு

தற்போது ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து வெளியே வரும் பொதுமக்களுக்கு தகுந்த அறிவுரைகளை வழங்கி கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அரசின் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத நபர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

முக கவசம் அணியாமல் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாத நபர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்க வேண்டும். அபராதம் விதிப்பது அரசின் நோக்கமல்ல. அதிகரித்து வரும் கொரோனா பெருந்தொற்றினை கட்டுப்படுத்த அரசின் வழிகாட்டுதல்களை மக்கள் பின்பற்றி முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மண்டல கள ஒருங்கிணைப்பு அலுவலர் எஸ்.கோபால சுந்தரராஜ், மண்டல அலுவலர் டாக்டர் பி.எம்.செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story