தளர்வில்லா முழு ஊரடங்கின் 2-ம் நாள்: தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் திறப்பு

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் திறக்கப்பட்டன. பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து அத்தியாவசிய பொருட்கள் வாங்கி சென்றனர்.
தளர்வில்லா முழு ஊரடங்கின் 2-ம் நாள்: தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் திறப்பு
Published on

சென்னை,

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், கடந்த 15-ந்தேதி முதல் ரேஷன் கடைகளில் கொரோனா முதற்கட்ட நிவாரண தொகையாக ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது. பொதுமக்களுக்கு தங்களது ரேஷன் அட்டைகளுக்கு ஒதுக்கப்பட்ட நாளில் சென்று நிவாரண தொகை பெற்று வந்தனர்.

இந்தநிலையில் கொரோனா பரவல் தீவிரம் அடைந்து வருவதின் எதிரொலியாக, கடந்த 24-ந்தேதி முதல் தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இதனால் காய்கறி, மளிகை கடைகள் உள்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டன. ரேஷன் கடைகளும் அடைக்கப்பட்டன.

மு.க.ஸ்டாலின் உத்தரவு

இதற்கிடையில் பலர் இன்னும் நிவாரணத்தொகை பெறாததால் ரேஷன் கடைகள் திறக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும் அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் மக்களும் இந்த கருத்தை வலியுறுத்தி வந்தனர்.

இந்தநிலையில் பொதுமக்கள் நலன் கருதி தளர்வில்லா முழு ஊரடங்கு அமலில் இருந்தாலும் ரேஷன் கடைகள் 25-ந்தேதி (நேற்று) முதல் திறக்கப்படும் என்றும், காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை ரேஷன் கடைகள் செயல்படும் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகளும் அறிவிக்கப்பட்டன.

ரேஷன் கடைகள் திறப்பு

அதன்படி தமிழகம் முழுவதும் நேற்று காலை 8 மணிக்கு ரேஷன் கடைகள் திறக்கப்பட்டன. இதையடுத்து பொதுமக்கள் முக கவசம் அணிந்தபடி, சமூக இடைவெளி கடைப்பிடித்து அத்தியாவசிய பொருட்கள் வாங்கி சென்றனர். மேலும் கொரோனா முதற்கட்ட நிவாரணத்தொகை பெறாதவர்களும் தங்களுக்கான தொகையை பெற்றுச்சென்றனர்.

அதேபோல ரேஷன் கடைக்கு செல்லும் பொதுமக்களை ரேஷன் கார்டை சரிபார்த்து போலீசாரும் செல்ல அனுமதித்தனர்.

போலீசார் கண்காணிப்பு

மேலும் தளர்வில்லா முழு ஊரடங்கின் 2-ம் நாளான நேற்று போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். உரிய ஆவணங்கள் வைத்திருந்தோர் மற்றும் அவசர தேவைகளுக்காக செல்வோரை போலீசார் அனுமதித்தனர். மேலும் வாகனங்களிலும் போலீசார் ரோந்து சென்று சாலைகளில் தேவையில்லாமல் கூட்டம் கூட்டமாக நிற்பவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். தேவையில்லாமலும், அத்தியாவசிய காரணங்கள் இன்றியும் சுற்றியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதேபோல வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com