ஸ்ரீபெரும்புதூரில் சுட்டுக்கொல்லப்பட்ட கொள்ளையனின் தம்பி துப்பாக்கியுடன் தப்பி ஓட்டம்


ஸ்ரீபெரும்புதூரில் சுட்டுக்கொல்லப்பட்ட கொள்ளையனின் தம்பி துப்பாக்கியுடன் தப்பி ஓட்டம்
x
தினத்தந்தி 13 Oct 2021 12:15 AM GMT (Updated: 12 Oct 2021 9:35 PM GMT)

ஸ்ரீபெரும்புதூரில் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட வட மாநில கொள்ளையனின் தம்பி துப்பாக்கியுடன் தப்பி ஓடி விட்டதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை,

ஸ்ரீபெரும்புதூரில் போலீசார் தற்காப்புக்காக நடத்திய துப்பாக்கி சூட்டில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கொள்ளையன் முர்தர்ஷா என்பவர் இறந்து விட்டார். அவருடைய கூட்டாளி நயிம் அக்தர் உயிரோடு போலீசாரால் சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இவர்கள் பயங்கர சதித்திட்டத்துடன் தான் தமிழகம் வந்துள்ளனர்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பே தற்போது போலீசாரின் துப்பாக்கி குண்டுக்கு பலியாகி உள்ள முர்தர்ஷா தனது தம்பியோடு தமிழகம் வந்துள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தில் கள்ளதுப்பாக்கிகள் சர்வ சாதாரணமாக கிடைக்கும். முர்தர்ஷா தமிழகம் வரும்போதே இரண்டு கள்ளதுப்பாக்கிகளை வாங்கிக்கொண்டு வந்ததாக தகவல் கிடைத்துள்ளது.

ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுகோட்டை பகுதியில் அவர்கள் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி உள்ளனர். அங்கு கூலி வேலை செய்துகொண்டே, மக்களோடு மக்களாக பழகி தமிழ் பேச கற்றுள்ளனர். சமீபத்தில்தான் தற்போது கைது செய்யப்பட்டுள்ள நயிம்அக்தர் ஸ்ரீபெரும்புதூர் வந்துள்ளார்.

ஸ்ரீபெரும்புதூரில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த நிறைய பேர் கூலி வேலை செய்து வாழ்கிறார்கள். இதனால் இவர்களும் ஸ்ரீபெரும்புதூர் பகுதியை தங்களது கொள்ளை தொழிலுக்கு பயன்படுத்திக்கொள்ள தேர்வு செய்துள்ளனர். இந்திரா என்ற பெண்ணிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டும் போது, நகையை கழற்று என்று தமிழில்தான் பேசி உள்ளனர். ஆனால் அவர்களை விரட்டிச்சென்ற பொதுமக்களிடம் இந்தியில் பேசி இருக்கிறார்கள்.

சிதறி கிடந்த தோட்டாக்கள்

பொதுமக்களிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி விட்டு காட்டுப்பகுதிக்குள் தப்பிசெல்லும் போது, அவர்கள் அணிந்திருந்த 2 சட்டைகளில் ஒன்றை கழற்றி வீசி விட்டு சென்றுள்ளனர். அப்போது அவர்கள் வைத்திருந்த துப்பாக்கி கீழே விழந்துள்ளது. அதில் இருந்த 3 தோட்டாக்கள் தவறி கீழே விழுந்துள்ளது. அது தெரியாமல் அவர்கள் துப்பாக்கியை மட்டும் எடுத்துச் சென்றுள்ளனர். கீழே விழுந்துள்ள 3 தோட்டாக்களை கைப்பற்றி உள்ளோம். அவர்கள் கழற்றி வீசிய சட்டையையும் எடுத்துள்ளோம்.

தம்பி எங்கே?

இந்திராவிடம் நகை பறித்த போது தற்போது சுட்டுக் கொல்லப்பட்டுள்ள கொள்ளையனையும், கைது செய்யப்பட்டுள்ள கொள்ளையனையும் மட்டுமே பார்த்ததாக அவர் சொல்கிறார். பொதுமக்களும் இவர்கள் 2 பேரை மட்டுமே பார்த்துள்ளதாக தெரிவிக்கின்றனர். இதனால் இந்த சம்பவத்தில் இவர்கள் 2 பேர் மட்டுமே தொடர்புடையவர்கள் என்பது உறுதியாகி விட்டது.

ஆனால் கொள்ளையன் முர்தர்ஷாவின் தம்பி எங்கே போனார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. அவரும் துப்பாக்கி வைத்திருந்ததாக தெரிகிறது. அவர் சொந்த ஊருக்கு சென்று விட்டாரா? அல்லது ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் அவரது ஊர்க்காரர்களோடு பதுங்கி உள்ளாரா?, என்று விசாரணை நடக்கிறது. அவரை பிடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முளையிலேயே

இந்த வட மாநில கொள்ளையர்களை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட்டோம். இல்லாவிட்டால் இவர்களால், மேலும் பல விபரீத சம்பவங்கள் நடைபெற்று இருக்கலாம். இந்த சம்பவத்தை பொறுத்தவரையில் விசாரணையை தீவிரப்படுத்தி தோண்ட, தோண்ட திடுக்கிடும் தகவல்களாக வந்து கொண்டே இருக்கிறது.

இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

கொள்ளையர்கள் கத்தியால் குத்தியதில் காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் போலீஸ் ஏட்டு மோகன்ராஜிடம், செல்போனில் பேசி டி.ஜி.பி.சைலேந்திரபாபு நலம் விசாரித்தார். சைலேந்திரபாபு உத்தரவின்பேரில் கூடுதல் டி.ஜி.பி.தாமரைக்கண்ணன், ஐ.ஜி.சந்தோஷ்குமார், டி.ஐ.ஜி.சத்தியபிரியா, சூப்பிரண்டு வருண் ஆகியோர் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story