விஜயதசமியன்று கோவில்கள் திறக்கப்படுமா? முதல்-அமைச்சர் இன்று ஆலோசனை


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 13 Oct 2021 1:22 AM GMT (Updated: 2021-10-13T11:17:45+05:30)

தமிழகத்தில் விஜயதசமியன்று கோவில்களை திறப்பது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை, 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இதன்படி, வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை வழிபாட்டு தலங்கள் மூடியிருக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த சுழலில் விஜயதசமி பண்டிகை வருகிற வெள்ளிக்கிழமை வருகிறது. இந்த பண்டிகையை முன்னிட்டு அனைத்து கோவில்களையும் திறக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் பல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை எல்லாம் அவசர வழக்குகளாக விசாரணைக்கு எடுக்கக்கோரி நீதிபதிகள் ஆர்.மகாதேவன், அப்துல் குத்தூஸ் ஆகியோர் முன்பு வக்கீல்கள் நேற்று காலையில் முறையிட்டனர்.

அதன்படி அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, நாடு முழுவதும் கொரோனா பரவல் முற்றிலும் முடிவுக்கு வரவில்லை. அதனால் ஊரடங்கை தளர்வுகளுடன் அமல்படுத்த வேண்டும் என்று கடந்த செப்டம்பர் 21-ந் தேதி மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதுவும் தடுப்பூசிகளை போட்டு பரவலை தடுக்க வேண்டும். அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை ஏராளமான பண்டிகைகள் வருவதால், கூட்டம் கூட்டமாக மக்கள் கூடுவதை அனுமதிக்கக்கூடாது என்றும் மத்திய அரசு கூறியுள்ளது என்றார். அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ‘விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு கோவில்களை திறப்பது குறித்து தமிழக அரசே முடிவு எடுத்துக்கொள்ளலாம்’ என்று கூறினர்.

இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மருத்துவத்துறை வல்லுனர்கள், நிபுணர்கள் ஆகியோருடன் இன்று (புதன்கிழமை) ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வுகள் அளிப்பது மற்றும் விஜயதசமி அன்று கோவில்களை திறப்பது குறித்தும் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story