தஞ்சை மாநகராட்சியில் ரூ.284.70 கோடிக்கு பட்ஜெட் தாக்கல்


தஞ்சை மாநகராட்சியில் ரூ.284.70 கோடிக்கு பட்ஜெட் தாக்கல்
x

தஞ்சை மாநகராட்சியில் ரூ.284.70 கோடிக்கு பட்ஜெட் தாக்கல்

தஞ்சாவூர்

தஞ்சை மாநகராட்சியில் ரூ.284.70 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனவும், ரூ.4.41 கோடி உபரி பட்ஜெட் எனவும் மேயர் சண்.ராமநாதன் தெரிவித்தார்.

பட்ஜெட் தாக்கல்

தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் மாநகரசபை அவசர கூட்டம் நேற்றுமாலை நடந்தது. கூட்டத்திற்கு மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தலைமை தாங்கினார். துணை மேயர் அஞ்சுகம்பூபதி, ஆணையர் சரவணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை கணக்கு குழுத் தலைவரும், மாநகராட்சி கவுன்சிலருமான வெங்கடேஷ் தாக்கல் செய்தார்.

முன்னதாக மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் பேசியதாவது:-

தமிழகத்திலேயே தஞ்சை மாநகராட்சி முதல் முறையாக அனைத்து கடன்களையும் அரசுக்கு திரும்ப செலுத்தி கடனில்லா மாநகராட்சி என்ற பெருமையை பெற்றுள்ளது. மாநகராட்சி பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் பெறப்பட்ட கடன் தொகைக்கு தவணை திரும்ப செலுத்தும் விதமாக 2022-23-ம் நிதியாண்டில் ரூ.2.72 கோடி திரும்ப செலுத்தப்பட்டது. நடப்பு நிதியாண்டில் மீதமுள்ள ரூ.6.01 கோடி திரும்ப செலுத்தப்பட உள்ளது.

உபரி பட்ஜெட்

பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து அடிப்படை வசதிகளும் மாநகராட்சி பொது நிதியில் இருந்து செலவு செய்வதை தவிர்த்து, அரசின் முழு மானியத்துடன் பெறப்படும் திட்டங்களின் கீழ் பணியை மேற்கொள்ள முன்மொழிவுகள் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அரசு வழிகாட்டுதலின்படி நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பொதுமக்கள் பங்கு தொகை மற்றும் அரசு மானியம் சேர்த்து மாநிலத்திலேயே அதிக அளவில் 2022-23-ம் ஆண்டு ரூ.7.96 கோடியில் பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. வருகிற 2023-24-ம் நிதியாண்டில் ரூ.9.94 கோடியில் பணிகள் எடுத்துக் கொள்ளப்பட உள்ளன. நடப்பு நிதியாண்டுக்கு (2023-24) ரூ.4.41 கோடிக்கு உபரி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில், ரூ.284.70 கோடிக்கு வரவு எதிர்பார்க்கப்பட்டு, ரூ.280.28 கோடிக்கு செலவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மாநகராட்சி பள்ளியில் இறுதி ஆண்டு பள்ளி கல்வி முடித்துள்ள மாணவர்கள் உயர்கல்வி பயில ஏதுவாக ஜே.இ.இ., நீட் தேர்வுக்கு பயிற்சி பெறும் வகையில் அரசு மற்றும் தனியார் பயிற்சி மையங்களுடன் இணைந்து பயிற்சி பெறுவதற்கான செலவுத்தொகை மாநகராட்சி நிதியில் இருந்து வழங்க ஏற்பாடு செய்யப்படும். அரசு பணிக்கான போட்டி தேர்வு எழுத விருப்பமுள்ள ஏழை, எளிய மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி வழங்க மாநகராட்சி நிதியில் இருந்து செலவு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story