28-ந்தேதி காரையார் சொரிமுத்து அய்யனார் கோவில் திருவிழா: தனியார் வாகனங்கள் செல்ல தடை

28-ந்தேதி காரையார் சொரிமுத்து அய்யனார் கோவில் திருவிழா நடைபெற உள்ள நிலையில் தனியார் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
விக்கிரமசிங்கபுரம்:
பாபநாசம் மேற்குத்தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற காரையார் சொரிமுத்து அய்யனார் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவசை திருவிழா கோலாகலமாக நடைபெறும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து குடிசைகள் அமைத்து தங்கி, கிடா வெட்டி சாமி தரிசனம் செய்து வந்தனர். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக கோவில் திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க அரசு தடை விதித்திருந்தது.
இந்த நிலையில் இந்தாண்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை) சொரிமுத்து அய்யனார் கோவிலில் கால்நாட்டு நிகழ்ச்சியும், 28-ந் தேதி திருவிழாவும் நடைபெற இருக்கிறது. இந்த கோவில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ளதால் கோவில் கொடை விழாவை முன்னிட்டு வனத்துறை சார்பாக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அம்பை கோட்ட வனத்துறை துணை இயக்குனர் செண்பகப்பிரியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் காலை 6 மணி முதல் மாலை 6 வரை அரசு பஸ்களில் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். தனியார் வாகனங்களுக்கு அனுமதியில்லை. பக்தர்கள் பொருட்களை துணிப்பையில் கொண்டு வர வேண்டும். வனத்திற்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள், ஆயுதங்கள் உள்ளிட்ட பொருட்கள் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. வருகிற 25-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை மணிமுத்தாறு, அகஸ்தியர் அருவியில் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்படும். கட்டாயம் முக கவசம் அணிந்து வர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






