'நீட்' தேர்வினை 2,967 பேர் எழுதினர்
புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 மையங்களில் நீட் தேர்வினை 2,967 பேர் தேர்வு எழுதினர். முதன் முதலாக மையங்கள் அமைக்கப்பட்டதால் பெற்றோர், மாணவர் வரவேற்பு தெரிவித்தனர்.
நீட் தேர்வு
மருத்துவப்படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவுத்தேர்வு நேற்று நாடு முழுவதும் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 மையங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. இதற்கு முன்பு நீட் தேர்வின் போது மையங்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைக்கப்படவில்லை. பக்கத்து மாவட்டமான திருச்சி, தஞ்சாவூரில் அமைக்கப்பட்ட மையங்களில் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதி வந்தனர்.
இந்த ஆண்டு தேர்வு மையம் புதுக்கோட்டை மாவட்டத்திலும் அமைக்கப்பட்டதால் மாணவ-மாணவிகள், அவர்களது பெற்றோர் மகிழ்ச்சியடைந்து வரவேற்பு தெரிவித்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 மையங்களில் தேர்வு எழுத 3 ஆயிரத்து 172 பேர் விண்ணப்பித்திருந்தனர். தேர்வர்கள் நேற்று காலை 10 மணிக்கு மேல் தேர்வு மையத்திற்கு வரத்தொடங்கினர்.
அணிகலன்களை கழற்றினர்
புதுக்கோட்டை அருகே சிவபுரத்தில் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் பகல் 11.30 மணிக்கு மேல் தேர்வர்கள் சோதனைக்கு பின் அனுமதிக்கப்பட்டனர். அவர்களது அடையாள அட்டை, நுழைவுச்சீட்டு, புகைப்படம் உள்ளிட்டவை சரியாக உள்ளதா? என சரிபார்த்து மையத்திற்குள் அனுப்பினர். மேலும் தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தியிருந்த கட்டுப்பாடுகளின் படி மாணவ-மாணவிகள் அனுமதிக்கப்பட்டனர்.
இதனால் மாணவிகள் பலர் தாங்கள் அணிந்திருந்த கம்மள், கொலுசுகள் உள்ளிட்ட அணிகலன்களை கழற்றி தங்களது பெற்றோரிடம் கொடுத்து அனுப்பினர். மேலும் சுடிதார் அணிந்து வந்தவர்கள் தங்களது துப்பட்டாவையும் கழற்றி கொடுத்தனர். இதேபோல மாணவர்களுக்கும் ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. செல்போன், எலக்ட்ரானிக் பொருட்கள் உள்பட தடை செய்யப்பட்ட பொருட்கள் எதுவும் அனுமதிக்கப்படவில்லை. மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்து தேர்வர்களை மையத்திற்குள் அனுமதித்தனர்.
முக கவசம்
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தேர்வர்களுக்கு கைகளை கழுவ கிருமிநாசினி வழங்கப்பட்டன. மேலும் என் 95 ரக முக கவசம் வழங்கப்பட்டது. தேர்வர்கள் தண்ணீர் பாட்டில்கள் எடுத்து சென்றனர். தேர்வு மையத்திற்குள் பகல் 1.30 மணிக்குள் மாணவ-மாணவிகள் அனைவரும் அனுமதிக்கப்பட்டனர்.
தேர்வு மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.20 மணிக்கு முடிவடைந்தது. தேர்வு எழுதிவிட்டு வெளியே வரும் வரை அவர்களது பெற்றோர் வளாகத்தில் காத்திருந்தனர். தேர்வு மையத்திற்குள்ளே செல்லும் போது தங்களது குழந்தைகளை பெற்றோர் வாழ்த்தி அனுப்பினர். அதேபோல தேர்வு எழுதி முடித்து வந்ததும் தேர்வு எழுதியதை ஆர்வமுடன் கேட்டறிந்தனர்.
2,967 பேர் எழுதினர்
புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 மையங்களில் நடைபெற்ற 'நீட்' தேர்வை எழுத 3 ஆயிரத்து 172 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 2 ஆயிரத்து 967 பேர் எழுதினர். 205 பேர் தேர்வு எழுத வரவில்லை.
நீட் தேர்வு எழுத சென்ற அரசு பள்ளி மாணவிகளை
வாகனங்களில் அழைத்து சென்று நிர்வாகத்தினர்
மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு நேற்று நடந்தது. கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவிகள் கடந்த 2 ஆண்டுகளில் 11 மாணவிகள் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று மருத்துவம் படித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று நடந்த நீட் தேர்விற்கு கீரமங்கலம் மகளிர் மேல்நிலைப்பள்ளியிலிருந்து 65 மாணவிகள் தேர்வு எழுதச் சென்றனர். இவர்களுக்கு புதுக்கோட்டையில் பல்வேறு பகுதிகளில் தேர்வு மையங்கள் போடப்பட்டிருந்ததால் மாணவிகள் அவதிப்படக் கூடாது என்பதற்காக பள்ளி நிர்வாகத்தின் சார்பில் வேன்கள் ஏற்பாடு செய்து பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்களின் பாதுகாப்பில் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தலைமை ஆசிரியர் கோவித்தராஜ் கூறுகையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் ஒதுக்கீட்டில் எங்கள் பள்ளி மாணவிகள் 4 பேர் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்து மருத்துவம் படித்து வருகிறார்கள். அதே போல கடந்த ஆண்டு 7 மாணவிகள் தேர்ச்சி பெற்று பல்வேறு மருத்துவக்கல்லூரிகளில் படித்து வருகின்றனர். இந்த ஆண்டு 65 மாணவிகள் நீட் தேர்வு எழுதச் செல்கிறார்கள். மேலும் கடந்த ஆண்டு எங்கள் பள்ளியில் படித்த மாணவிகள் 10 பேரும் தேர்வு எழுதுகிறார்கள். அதனால் இந்த ஆண்டும் எங்கள் பள்ளி மாணவிகள் அதிகமானோர் மருத்துவம் படிக்க செல்வார்கள் என்றார்.
'நீட்' தேர்வு குறித்து கருத்து
நீட் தேர்வு குறித்து மாணவியின் தாய் தெரிவித்த கருத்து வருமாறு:-
பெற்றோர் பங்கையற்செல்வி:- நான் இடைநிலை ஆசிரியையாக பணியாற்றுகிறேன். எனது மகள் 'நீட்' தேர்வு எழுதுகிறாள். கொரோனா காலக்கட்டத்தினால் பள்ளிகள் முழுமையாக திறக்கப்படாததால் மாணவ-மாணவிகள் சற்று கல்வியில் பின்தங்கினர். இருப்பினும் தனியார் மற்றும் அரசு பயிற்சி மையங்கள் மூலமும் 'நீட்' தேர்வு தயாராகினர். இந்த ஆண்டு புதுக்கோட்டை மாவட்டத்திலும் தேர்வு மையம் அமைக்கப்பட்டதால் மாணவ-மாணவிகளுக்கு அலைச்சல் குறைந்தது. இல்லையெனில் பதற்றத்துடன் வெளி மாவட்டத்திற்கு சென்று எழுத வேண்டும். ஆனால் தற்போது எந்தவித பதற்றமும் இல்லாமல் மாணவ-மாணவிகள் எளிதாக வந்து தேர்வு மையத்திற்கு சென்று எழுதும் சூழல் இருந்தது.]








