3 லட்சம் பேர் பங்கேற்ற "புதுக்கோட்டை வாசிக்கிறது" நிகழ்ச்சி


3 லட்சம் பேர் பங்கேற்ற புதுக்கோட்டை வாசிக்கிறது நிகழ்ச்சி
x

புத்தக திருவிழாவை முன்னிட்டு 3 லட்சம் பேர் பங்கேற்ற புதுக்கோட்டை வாசிக்கிறது நிகழ்ச்சியை கலெக்டர் மெர்சி ரம்யா தொடங்கி வைத்தார்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை வாசிக்கிறது

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து ஜூலை 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 6-ந் தேதி வரை 10 நாட்கள், 6-வது புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, 3 லட்சம் பேர் பங்கேற்ற மாபெரும் "புதுக்கோட்டை வாசிக்கிறது" நிகழ்ச்சி புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சியை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தொடங்கி வைத்து, மாணவிகளுடன் அமர்ந்து புத்தகம் வாசித்தார்.

அதன்பின்னர் கலெக்டர் மெர்சி ரம்யா கூறியதாவது:- புத்தக திருவிழா குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சுமார் 3 லட்சம் பள்ளி, கல்லூரி, மகளிர் சுயஉதவிக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்புடன் பொது இடங்களில் புதுக்கோட்டை வாசிக்கிறது என்ற மாபெரும் நிகழ்ச்சி மாவட்ட முழுவதும் காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை ஒரு மணி நேரம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இப்புத்தக திருவிழாவில் பல்வேறு தலைப்புகளின் கீழ் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் மக்களின் பார்வைக்காக நூற்றுக்கும் மேற்பட்ட அரங்கங்களில் விற்பனைக்காகவும் வைக்கப்பட உள்ளது.

எண்ணம் மேம்படும்

தினந்தோறும் ஒரு மணிநேரம் படிப்பிற்காக செலவிடும் பொழுது நமது எண்ணம் மேம்படும். மேலும் நம்முடைய தன்னம்பிக்கை மற்றும் உலகம் பற்றி தெரிந்துகொள்ளலாம். கிராமப்புறங்களில் பொதுமக்களிடையே நூலக பயன்பாட்டை உறுதி செய்யும் வகையில் அனைத்து நூலகங்களும் மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்களால் நிர்வகிக்கப்பட்டு, மக்களுக்கு தேவையான புத்தகங்கள் நூலகங்களில் வைக்கப்பட உள்ளது. புத்தக வாசிப்பு என்பது கற்பனை உலகத்தை நிஜமாக்குவதற்கு நம்மிடையே ஆர்வத்தை தூண்டுவதாகும். எனவே மாணவர்கள் அனைவரும் படிக்கும் பழக்கத்தை சிறு வயது முதலே பழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குனர் ரேவதி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கருணாகரன், மாவட்ட நூலக அலுவலர் சிவக்குமார், புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் ரமேஷ், பள்ளி துணை ஆய்வாளர் குருமாரிமுத்து மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ஆலங்குடி, கீரமங்கலம்

ஆலங்குடி தாலுகா பாச்சிக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பி.குளவாய்ப்பட்டி கிராமத்தில் ஆரோக்கிய மாதா கோவில் உள்ளது. அங்கு புத்தகம் வாசிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

கீரமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் புத்தகம் என்ற வடிவில் அமர்ந்து புத்தகம் வாசித்தனர்.

அன்னவாசல், விராலிமலை

மதியநல்லூர் அரசு உயர்நிலைப்பள்ளியில், பள்ளி தலைமை ஆசிரியர் தர்மசேகர் தலைமையில் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு புத்தகம் வாசித்தனர். இதேபோல் முக்கண்ணாமலைப்பட்டி அரசுமேல்நிலைப்பள்ளி, புல்வயல் அரசு உயர்நிலைப்பள்ளி, மரிங்கிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் புத்தகம் வாசிப்பு நிகழ்ச்சி நடந்தது.

விராலிமலை அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, கிளை நூலகம், ஊராட்சி நிர்வாகம் சார்பில் மாணவர்கள் புத்தகம் வாசிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள், அரசு பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊராட்சி அமைப்பினர் பல்வேறு வகையான நூல்களை வாசித்து மகிழ்ந்தனர்.

பொன்னமராவதி, கறம்பக்குடி

பொன்-புதுப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் நிர்மலா தலைமையில் புத்தகம் வாசிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதேபோல் வலம்புரி வடுகநாதன் மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் (பொறுப்பு) கணேசன் தலைமையிலும், பொன்-புதுப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி மற்றும் பொன்னமராவதி தாலுகாவில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவ, மாணவிகள் பள்ளி வளாகத்தில் புத்தகம் வாசித்தனர்.

கறம்பக்குடி தாலுகாவில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகளில் மாணவர்கள் ஒரு மணிநேரம் புத்தகம் வாசித்தனர்.

கறம்பக்குடி அருகே உள்ள தட்டாமனைப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் திறந்த புத்தகம் மற்றும் 6 எண் வடிவில் அமர்ந்து புத்தகங்களை வாசித்தனர்.


Next Story