தமிழ் எழுத்துகளுடன் மேலும் 3 பானை ஓடுகள் கண்டெடுப்பு
வள்ளியூர் அருகே துலுக்கர்பட்டி அகழாய்வில் தமிழ் எழுத்துகளுடன் கூடிய மேலும் 3 பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன. இதையொட்டி, “அள்ள அள்ள குறையா அமுதசுரபி” என்று துலுக்கர்பட்டி குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு டுவிட் செய்துள்ளார்.
வள்ளியூர்:
வள்ளியூர் அருகே துலுக்கர்பட்டி அகழாய்வில் தமிழ் எழுத்துகளுடன் கூடிய மேலும் 3 பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன. இதையொட்டி, "அள்ள அள்ள குறையா அமுதசுரபி" என்று துலுக்கர்பட்டி குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு டுவிட் செய்துள்ளார்.
துலுக்கர்பட்டியில் அகழாய்வு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள துலுக்கர்பட்டியில் அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது. அங்கு நடந்த முதல்கட்ட அகழாய்வு பணியின்போது, 1,000-க்கும் மேற்பட்ட பழங்கால தொன்மையான ஓடுகள், குவளைகள், பாசிமணிகள் போன்ற பல்வேறு பொருட்கள் கண்டறியப்பட்டன.
தற்போது துலுக்கர்பட்டி விளாங்காடு பகுதியில் 2-ம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது. இந்த அகழாய்வின்போது செஸ் விளையாடுவதற்கு பயன்படுத்தும் சுடுமண்ணால் ஆன காய்கள், செம்பினால் ஆன மோதிரம், ஈட்டி முனை, பானை, பாசிகள், எலும்புகள், பழங்கால கூரைவீடுகள் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளிட்ட 450-க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
பானை ஓடுகள்
சமீபத்தில் புலி என்று தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்ட கருப்பு-சிவப்பு நிறம் கலந்த பானை ஓடு கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்ட மேலும் 3 பானை ஓடுகள் கண்டறியப்பட்டு உள்ளன. அந்த ஓடுகளில் குவிர(ன்), திஈய மற்றும் திச என எழுத்துகள் பொறிக்கப்பட்டு உள்ளன.
இதுவரையிலும் கண்டெடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தும் தனித்தனியாக சேகரிக்கப்பட்டு வருகின்றன. அவை சென்னையில் உள்ள தொல்லியல் துறையின் ஆய்வுக்கு அனுப்பப்பட உள்ளதாக துலுக்கர்பட்டி அகழாய்வு பணி களஇயக்குனர் வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் தங்கம் தென்னரசு டுவிட்
இதற்கிடையே, தமிழக தொல்லியியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தனது டுவிட்டர் பக்கத்தில் துலுக்கர் பட்டி குறித்து டுவிட் செய்துள்ளார்.
அதில் அவர், "நெல்லை மாவட்டம் துலுக்கர்பட்டியில் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை வாயிலாக நடைபெற்று வரும் அகழாய்வில் கடந்த வாரம் 'புலி' என்ற தமிழ் எழுத்துகள் பொறிப்பு கொண்ட பானை ஓடு கிடைக்கப்பெற்றதை பெருமையுடன் பகிர்ந்திருந்தேன். தற்போது பானை ஓடுகளில் திஈய, திச, குவிர(ன்) ஆகிய தமிழ் எழுத்துகள் பொறிப்பு கொண்ட பானை ஓடுகள் கிடைக்கப்பெற்று இருப்பது குறிப்பிடத்தகுந்தது ஆகும். நம்பியாற்றின் கரையில் எழுத்தறிவு பெற்ற தமிழ்ச்சமூகம் தனக்கே உரிய நாகரிக பண்பாட்டு கூறுகளோடு வாழ்ந்து வந்தமைக்கு இது நல்ல சான்றாகும். அள்ள அள்ள குறையா அமுதசுரபி துலுக்கர்பட்டி!" என்று தெரிவித்துள்ளார்.