லாரி-கார் நேருக்கு நேர் மோதல்:2 கைக்குழந்தைகள் உள்பட 3 பேர் சாவுசிதம்பரம் அருகே பரிதாபம்
சிதம்பரம் அருகே லாரி, கார் நேருக்கு நேர் மோதியவிபத்தில் 2 கைக்குழந்தைகள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.
சிதம்பரம்,
நாகை மாவட்டம் அக்கரை பேட்டை திடீர் குப்பம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவருடைய மனைவி வளர்மதி (30). இவர்களது மகன் ஹாிஹரன்(10), மகள் 3 மாத கைக்குழந்தையான நிகல்யா.
கார்த்திகேயன் வேலைக்காக பக்ரைன் நாட்டுக்கு செல்ல முடிவு செய்து, நேற்று முன்தினம் காலை வீட்டில் இருந்து புறப்பட்டார்.
கார்த்திகேயனை வழி அனுப்புவதற்காக அவருடன் வளர்மதி, நிகல்யா, ஹரிஹரன், வளர்மதியின் தங்கை வனிதா (29), இவரது 6 மாத குழந்தையான விக்ராந்த், வளர்மதியின் தாய் வெண்ணிலா (60) ஆகியோரும் ஒரு காரில் சென்னை விமான நிலையத்துக்கு சென்றனர்.
காரை கீழப்பெரும்பள்ளம் மேல தெருவை சேர்ந்த சத்தியசீலன் (38) என்பவர் ஓட்டினார்.
லாரி-கார் மோதல்
விமான நிலையத்தில், கார்த்திகேயனை வழி அனுப்பி வைத்துவிட்டு அவர்கள், இரவில் அங்கிருந்து காரில் ஊருக்கு புறப்பட்டனர். கார் நேற்று காலை 7 மணியளவில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கொத்தட்டை என்ற கிராமத்தில் மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தது.
அப்போது, எதிரே லாரி ஒன்று சிதம்பரத்தில் இருந்து கடலூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது.
3 பேர் சாவு
இதில் காரின் இடிபாட்டிற்குள் சிக்கிய சத்தியசீலன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், காரில் இருந்த வனிதா, வெண்ணிலா, விக்ராந்த், வளர்மதி, ஹரிஹரன், நிகல்யா ஆகியோர் படுகாயமடைந்தனர்.
உடன் அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சையில் இருந்த 3 மாத குழந்தையான நிகல்யா, 6 மாத குழந்தை விக்ராந்த் ஆகியோர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மற்றவர்களுக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
விபத்து குறித்து புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வினோதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.