கார் மோதி சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் காயம்
கறம்பக்குடி அருகே கார் மோதி சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்.
கறம்பக்குடி அருகே உள்ள வெட்டன் விடுதியில் நேற்று மாலை தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஆலங்குடி போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் (வயது 48) மற்றும் போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சென்ற சொகுசு கார் ஒன்று சாலையோரம் நின்று கொண்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார், அவரது அருகே நின்ற ராமகிருஷ்ணன் (28), பழனிவேல் (45) ஆகியோர் மீது மோதியது. இதையடுத்து காயமடைந்த அவர்கள் 3 பேரையும் போலீசார் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த விபத்து குறித்து மழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.