விபத்தில் 3 பேர் காயம்

விக்கிரவாண்டி அருகே நடந்த விபத்தில் 3 பேர் காயம் அடைந்தனர்.
விக்கிரவாண்டி,
விழுப்புரத்தில் இருந்து செஞ்சிக்கு கோழிகளை ஏற்றிக்கொண்டு மினிவேன் ஒன்று புறப்பட்டது. விக்கிரவாண்டி அருகே லட்சுமிபுரம் அருகே சென்றபோது அங்குள்ள மும்முனை சந்திப்பில் திடீரென சாலையின் குறுக்கே வந்த கார் மீது மினிவேன் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த மினிவேன் தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் நின்றவர்கள் மீது மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த கஸ்பாகாரணையைச் சேர்ந்த முருகன் (வயது52) மற்றும் சாலையோரம் நின்றிருந்த தும்பூர் கிராமத்தைச் சேர்ந்த வசந்த் (25), மணி (20) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் 3 பேரும் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது குறித்த தகவலின் பேரில் விக்கிரவாண்டி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் தேவரத்தினம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலையில் கவிழந்து கிடந்த மினிவேனை அப்புறப்படுத்தி போக்குவரத்து பாதிப்பை சரிசெய்தனர். இந்த விபத்தால் விழுப்புரம்-செஞ்சி சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






