செங்கல்பட்டு அருகே..நின்றிருந்த லாரி மீது ஆம்னி பஸ் மோதி விபத்து- 4 பேர் பலி

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது தனியார் ஆம்னி பஸ் மோதியது.
Published on

சென்னை,

செங்கல்பட்டு அருகே மதுராந்தகத்தில் திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை பயங்கர விபத்து ஏற்பட்டது. விழுப்புரத்தில் இருந்து சென்னை பூந்தமல்லிக்கு கிரானைட் கற்களை ஏற்றிக்கொண்டு வந்த லாரி ஒன்று தேசிய நெடுஞ்சாலையில் பழுதாகி நின்றது. அப்போது திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த  தனியார் ஆம்னி பஸ் ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் பழுதாகி நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியது.

 இந்த பயங்கர விபத்தில் ஆம்னி பஸ்சின் முன்பக்கம் நொறுங்கியது. இதில், ஆம்னி பஸ்சில் பயணம் செய்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதற்கிடையே, விபத்தில் சிக்கிய ஆம்னி பஸ்சின் பின் பக்கம்,  முசிறியில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த அரசு விரைவு பஸ் ஒன்று மோதியது. இந்த விபத்துகளில் 20 க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த போலீசார்,  காயம் அடைந்த  பயணிகளை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக  செங்கல்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன.  

விபத்து காரணமாக திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கிட்டத்தட்ட 3 மணி நேரத்திற்கு பிறகே விபத்துக்குள்ளான வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டன. இதன்பிறகே போக்குவரத்து சீரானது. திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதிக்கொண்ட சம்பவம் பயணிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com