பெண்ணிடம் சங்கிலி பறித்தவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை
விக்கிரமசிங்கபுரத்தில் பெண்ணிடம் சங்கிலி பறித்தவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து அம்பை கோாட்டு தீர்ப்பளித்தது.
அம்பை:
விக்கிரமசிங்கபுரம் ராமலிங்கபுரம் வடக்கு தெருவை சேர்ந்த அருணாசலம் மனைவி முத்துலட்சுமி. இவர் கடந்த 2014-ம் ஆண்டு பீடிக்கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் முத்துலட்சுமி அணிந்திருந்த சுமார் 56 கிராம் எடையுள்ள தாலி சங்கிலியை பறித்துச் சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் விக்கிரமசிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்த வழக்கிலும், இதேபோல் அம்பை மற்றும் சிவந்திபுரத்திலும் சங்கிலி பறிப்பு வழக்கில் தொடர்புடைய வீரவநல்லூர் கோட்டைவாசல் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ஸ்ரீகாந்த் (வயது 35) தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து இவர் மீது தீர்ப்புரை பகரப்படாமல் இருந்தது. இந்நிலையில் விக்கிரமசிங்கபுரம், அம்பை போலீசார் ஸ்ரீகாந்தை கைது செய்து அம்பை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். குற்றவியல் நடுவர் பல்கலைச்செல்வன் விசாரித்து விக்கிரசிங்கபுரம் சங்கிலி பறிப்பு வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் ஒரு மாதம் சிறை தண்டனை விதித்தும், அம்பை மற்றும் சிவந்திபுரம் சங்கிலி பறிப்பு வழக்கில் சிறையில் இருந்த காலங்களை தண்டனை காலமாக கருதி ஒவ்வொன்றுக்கும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் பாரத செல்வி ஆஜரானார்.