தமிழகம் முழுவதும் 300 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை தொடங்கியது..!


தமிழகம் முழுவதும் 300 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை தொடங்கியது..!
x

தமிழகம் முழுவதும் 300 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படுகின்றன.

சென்னை,

தமிழகத்தில் தக்காளி விலை தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது. சென்னை, கோயம்பேட்டில் தக்காளி விலை இன்று கிலோ ரூ.110க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மக்களின் சிரமத்தை சற்று குறைக்கும் விதமாக ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், முதல்-அமைச்சரின் உத்தரவின் படி தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தும் வகையில் மொத்தம் 302 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை தொடங்கி உள்ளது. தக்காளி அதிகம் வராததால் 1 நபருக்கு 1 கிலோ என்ற அளவில்தான் 60 ரூபாய்க்கு ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. சென்னையில் காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலைக்கு உட்பட்ட ராமாபுரம், மடிப்பாக்கம், போரூர், வளசரவாக்கம், மதுரவாயல் லட்சுமி நகர், வானகரம், கந்தன்சாவடி, காரப்பாக்கம் ரேசன் கடைகளில் தக்காளி விற்கப்படுகிறது.

திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்க கடைகள், ராயப்பேட்டை, பெசன்ட் நகர், சாஸ்திரி நகர், அவ்வை நகர், தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, ஸ்ரீராம் நகர், தி.நகர், சேத்துப்பட்டு, கோடம்பாக்கம், லட்சுமி புரம், நுங்கம்பாக்கம், கோபாலபுரம், ஆர்.ஏ.புரம், சைதாப்பேட்டை, சின்னமலை, கிண்டி, கே.கே.நகர், ஆர்.கே.நகர், எருக்கஞ்சேரி, மணலி, மாம்பலம், சாலி கிராமம், வேளச்சேரி, ஆதம்பாக்கம் என 87 ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.

இது தவிர மதுரை மண்டலத்தில் 20 கடைகள், கோவை மண்டலத்தில் 20, திருச்சி மண்டலத்தில் 20, சேலம் மண்டலம்-15, திருநெல்வேலி மண்டலம்-15, திருப்பூர்-10, வேலூர்-15, ஈரோடு-15, தூத்துக்குடி-15, தஞ்சாவூர்-15, திண்டுக்கல்-10, காஞ்சிபுரம்-10, கரூர்-10, கடலூர்-10, விழுப்புரம்-10, கன்னியாகுமரியில்-5 ரேஷன் கடை என 215 ரேஷன் கடைகள் ஆக மொத்தம் 302 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்து வருகின்றனர்.


Next Story