பழனியில் 3-வது நாளாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை...!


பழனியில் 3-வது நாளாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை...!
x

பழனியில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் 3-வது நாளாக இன்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல்,

டெல்லியில் இருந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் 5 பேர், திண்டுக்கல் மாவட்டத்துக்கு வந்து உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்கள், திண்டுக்கல்லில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த 5 பேரிடம் விசாரணை நடத்தினர்.

இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் பழனிக்கு சென்றனர். அங்கு பழனி பெரிய கடைவீதியில் டீக்கடை நடத்தி வரும் முகமது கைசர் (வயது 50), என்பவரிடம் விசாரணை நடத்தினர். இவர் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மதுரை மண்டல தலைவராக இருந்தவர் ஆவார். பழனி நகர் போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் வைத்து அவரிடம் 6 மணி நேரம் விசாரணை நடத்தி விட்டு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் நேற்று 2-வது நாளாக முகமதுகைசரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்து சென்றனர். காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை விசாரித்து விட்டு அவரை விடுவித்தனர். அதன்பின்னர் முகமதுகைசரின் டீக்கடையில் சதாம் (30) என்பவரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவரை பழனி சண்முகநதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில், பழனியில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் 3-வது நாளாக இன்றும் விசாரணை நடத்தி வருகின்றனர். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மதுரை மண்டல தலைவர் முகமது கைசர் உள்ளிட்ட 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பழனியில் 3-வது நாளாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story