திருவல்லிக்கேணியில் 3-வது சம்பவம்: மாடு முட்டி முதியவர் காயம் - பொதுமக்கள் பீதி


திருவல்லிக்கேணியில் 3-வது சம்பவம்: மாடு முட்டி முதியவர் காயம் - பொதுமக்கள் பீதி
x

சென்னை திருவல்லிக்கேணியில் சாலையில் நடந்து சென்ற முதியவரை மாடு முட்டி தூக்கி வீசிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது. கடந்த 10 நாட்களில் இது 3-வது சம்பவமாகும்.

சென்னை

சென்னை திருவல்லிக்கேணி டி.பி.கோவில் தெருவைச் சேர்ந்தவர் கஸ்தூரி ரங்கன் (வயது 65). நேற்று முன்தினம் இரவு அந்த பகுதி வழியாக சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, பின்னால் வந்த மாடு ஒன்று திடீரென கஸ்தூரி ரங்கனை முட்டி தூக்கி வீசியது.

இதில் அவரது தலையின் பின்பக்கம் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. அங்கிருந்தவர்கள் மாட்டை விரட்டிவிட்டு, கஸ்தூரி ரங்கனை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

சம்பவம் குறித்து ஐஸ்அவுஸ் போலீசார் வழக்குபதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து மாட்டின் உரிமையாளர்கள் யார்? என தேடி வருகின்றனர்.

இதற்கிடையே, முதியவரை மாடு முட்டிய சம்பவம் பற்றி அறிந்ததும் சென்னை மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பகுதிக்கு விரைந்து சென்றனர். அங்கே சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடிக்க உத்தரவிட்டனர். அதன்படி நேற்று ஒரே நாளில் 16 மாடுகளை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்தனர்.

தொடர்ந்து, மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன், மாடு உரிமையாளர்களுக்கு வீடியோ மூலம் விடுத்துள்ள எச்சரிக்கை பதிவில் கூறி இருப்பதாவது:-

மாநகராட்சி தரப்பில் பிடித்து செல்லப்படும் மாடுகளுக்கு உணவு, மருந்து அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், தெருவில் திரியும் மாடுகள் பிளாஸ்டிக், தெருவில் உள்ள தண்ணீர் ஆகியவற்றை அருந்துகிறது. மாடு உரிமையாளர்கள் இவ்வாறு பராமரிப்பது தவறு. மாடு வளர்ப்போரின் வாழ்வாதாரத்தை பாதிக்க வேண்டும் என்பது எங்கள் எண்ணமல்ல. மாடுகளால் ஏற்படும் விபத்துகளை உரிமையாளர்கள் சாதாரண நிகழ்வாக எடுத்து கொள்ளக்கூடாது.

தெருவில் திரியும் மாடுகளை பிடித்து வந்தால், ஊழியர்களை மிரட்டி அதை எடுத்து செல்லும் நிகழ்வுகள் நடைபெறுகின்றன. அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுப்பது, குழுக்களாக வந்து புகார் அளிப்பவர் மீதும், மிரட்டல் விடுப்பவர்கள் மீதும் போலீஸ்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். இதுவே கடைசி எச்சரிக்கை. மாட்டின் உரிமையாளர்கள் மாநகராட்சியின் உத்தரவுகளை மிகத் தீவிரமாக கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் அருகே கடந்த 17-ந்தேதி முதியவர் சுந்தரத்தை மாடு முட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு அடுத்த 2 நாட்கள் கழித்து 19-ந்தேதி குப்பைகளை கொட்டச்சென்ற செல்வி என்ற பெண்ணை மாடு முட்டி இழுத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திருவல்லிக்கேணியில் கடந்த 10 நாட்களில் தொடர்ந்து 3-வது சம்பவமாக தற்போது கஸ்தூரி ரங்கனை மாடு முட்டி தூக்கி வீசியது அந்த பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை மாநகராட்சி பகுதிகளில் சுற்றித்திரியும் மாடுகள் அடிக்கடி இதுபோல் பொதுமக்களை முட்டி காயப்படுத்தும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. ஏற்கனவே சென்னை அரும்பாக்கத்தில் பள்ளி மாணவியும், நங்கநல்லூர் பகுதியில் முதியவர் ஒருவரும் மாடு முட்டியதில் காயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு மட்டும் 3,836 மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளன

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்கும் பணியை சென்னை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, அவர் நிருபர்களிடம் கூறும்போது, "காவல்துறையோடு இணைந்து பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 226 மாட்டு உரிமையாளர்கள் மற்றும் அவர்களது முகவரியும், அவர்களிடம் உள்ள ஆயிரத்து 986 மாடுகள் பற்றி கணக்கெடுப்பு செய்யப்பட்டும், பட்டியல் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 61 மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்த ஆண்டில் 3 ஆயிரத்து 836 மாடுகள் பிடிக்கப்பட்டு, அவற்றின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது" என்றார்.


Next Story