மாணவ-மாணவிகளுக்கு வழங்குவதற்கு 3-ம் பருவ பாடப்புத்தகங்கள் தயார்- கல்வி அதிகாரிகள் தகவல்
மாணவ-மாணவிகளுக்கு வழங்குவதற்கு 3-ம் பருவ பாடப்புத்தகங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளதாக கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி
மாணவ-மாணவிகளுக்கு வழங்குவதற்கு 3-ம் பருவ பாடப்புத்தகங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளதாக கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.
3-ம் பருவ பாடப்புத்தகங்கள்
தமிழகத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. தேர்வு விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் வருகிற 2-ந்தேதி மீண்டும் திறக்கப்படுகின்றன. இந்த நிலையில் பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் மாணவ-மாணவிகளுக்கு வழங்குவதற்கு 3-ம் பருவ பாடபுத்தகங்கள் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் பாடபுத்தகங்கள் வைக்கப்பட்டு உள்ள அறையில் புத்தகங்கள் இருப்பு குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்து கல்வி அதிகாரிகள் கூறியதாவது:-
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் 48 நடுநிலைப்பள்ளிகள், கிணத்துக்கடவு தாலுகாவில் பேரூர் கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட 13 பள்ளிகளும் உள்ளன. இந்த பள்ளிகளில் 6-ம் வகுப்பில் 2,100 மாணவ-மாணவிகளும், 7-ம் வகுப்பில் 2,166 மாணவ-மாணவிகளும் சேர்த்து மொத்தம் 4,266 பேர் படித்து வருகின்றனர்.
பிரித்து வைக்கும் பணி
இதேபோன்று 6 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் 10 ஆயிரத்து 65 மாணவ-மாணவிகளுக்கு நோட்டுக்களும் வழங்கப்படுகின்றன. பொள்ளாச்சி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு வழங்குவதற்கு 20 ஆயிரம் புத்தகங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன. இதேபோன்று பொள்ளாச்சி வடக்கு, தெற்கு, ஆனைமலை ஆகிய ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளுக்கு 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு 3-ம் பருவ பாடபுத்தகங்கள் வழங்கப்படுகிறது. இந்த புத்தகங்கள் அந்தந்த ஒன்றிய அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. அரையாண்டு தேர்வு முடிந்து பள்ளிகள் திறக்கும் போது மாணவ-மாணவிகளுக்கு புத்தகங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக பாடபுத்தகங்கள் தனி, தனியாக பிரித்து வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.