நீட் தேர்வை 4 296 மாணவ மாணவிகள் எழுதினர்

மாவட்டத்தில், 7 மையங்களில் நடந்த நீட் தேர்வை 4,296 மாணவ-மாணவிகள் எழுதினர்
கடலூர்
நீட் தேர்வு
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் சோ்வதற்கு நீட் நுழைவு தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலேயே அவர்களுக்கு அரசு மருத்துவக்கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்படுகிறது.
இதன்படி இந்த ஆண்டிற்கான நீட் தேர்வு நேற்று நடந்தது. கடலூர் மாவட்டத்தில் இந்த தேர்வை எழுத விருத்தாசலம் ஜெயப்பிரியா வித்யாலயா பள்ளி, கடலூர் கிருஷ்ணசாமி நினைவு மெட்ரிக் பள்ளி, திருப்பாதிரிப்புலியூர் அரிஸ்டோ பப்ளிக் பள்ளி, , கடலூர் புனித வளனார் கல்லூரி, நெய்வேலி கேந்திரிய வித்யாலயா பள்ளி, நெய்வேலி ஜவகர் மேல்நிலைப்பள்ளி, கடலூர் முதுநகர் சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் பள்ளி ஆகிய 7 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது.
வரிசையில் காத்திருந்தனர்
இந்த தேர்வை 4,652 மாணவர்கள் எழுத ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. தேர்வு மதியம் 2 மணிக்கு தொடங்கும் என்றாலும் தேர்வர்கள் மதியம் 1 மணிக்கே தேர்வு மையத்திற்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் தொலைதூரங்களில் உள்ள மாணவ-மாணவிகள் மதியம் 12 மணிக்கே வந்து, தேர்வு மையத்திற்கு வெளியில் காத்திருந்தனர். தங்கள் பெற்றோர்கள், உறவினர்களையும் அழைத்து வந்து காத்திருந்தனர்.
தேர்வு மையத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் தடுப்பு கட்டைகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் தேர்வு எழுதும் மாணவர்களை மட்டும் அனுமதித்தனர். நேரம் செல்ல, செல்ல தேர்வு மைய நுழைவு வாயில் வரை வந்தனர். பின்னர் மதியம் 1 மணிக்கு பிறகு மாணவர்களை மட்டும் வரிசையில் நிறுத்தி தீவிர சோதனை செய்த பிறகு தேர்வு மையங்களுக்குள் செல்ல அனுமதித்தனர்.
4,296 பேர் தேர்வு எழுதினர்
அப்போது கைக்கடிகாரம், செல்போன், புளூடூத், ஹெட்போன், கேமரா, கால்குலேட்டர் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மாணவிகள் கம்மல், வளையல் உள்ளிட்ட பொருட்களை பெற்றோர்களிடம் கொடுத்து விட்டு சென்றனர். சிலர் முன்கூட்டியே வீட்டிலேயே கம்மல் உள்ளிட்ட பொருட்களை கழட்டி விட்டு வந்தனர். பாட்டிலில் தண்ணீர் தெரியும் படி கொண்டு சென்றனர்.
தொடர்ந்து மதியம் 2 மணிக்கு தேர்வு தொடங்கியது. தேர்வை மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் எழுதினர். இந்த தேர்வை 4,296 மாணவ-மாணவிகள் எழுதினர். 356 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு மாலை 5.20 மணிக்கு முடிவடைந்தது. இந்த தேர்வு மையத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் உத்தரவின்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால்பாரிசங்கர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.






