சொந்த நிறுவனத்தில் ரூ.4½ கோடி மோசடி
கோவை அருகே பெண் ஊழியருடன் சேர்ந்து சொந்த நிறுவனத்தில் ரூ.4½ கோடி மோசடி செய்தததாக மனைவி கொடுத்த புகாரின் பேரில் அதன் நிர்வாகியான கணவர் கைது செய்யப்பட்டார்.
கோவை அருகே பெண் ஊழியருடன் சேர்ந்து சொந்த நிறுவனத்தில் ரூ.4½ கோடி மோசடி செய்தததாக மனைவி கொடுத்த புகாரின் பேரில் அதன் நிர்வாகியான கணவர் கைது செய்யப்பட்டார்.
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் வீரபாண்டி பிரிவை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 43). இவருடைய மனைவி ஜிஷா (40). இவர் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:-
தனியார் நிறுவனம்
எனது தந்தை துபாயில் நகைக்கடை நடத்தி வருகிறார். அவர் எனது திருமணத்தின்போது 500 பவுன் நகை வரதட்சணையாக கொடுத்தார். எனது கணவர் ரஞ்சித்குமார் நடத்தி வந்த அனைத்து தொழிலிலும் நஷ்டம் ஏற்பட்டது. எனவே அவர் என்னிடம் இருந்த 500 பவுன் நகையையும் விற்றுவிட்டார்.
இதை அறிந்த எனது தந்தை வீரபாண்டி பிரிவில் ஒரு தனியார் நிறுவனத்தை தொடங்கினார்.
அதில் என்னை நிர்வாக இயக்குனராகவும், எனது கணவரை பொதுமேலாளராகவும் நியமித்தார். ஆனாலும் எனது தந்தையே துபாயில் இருந்தபடி அந்த நிறுவனத்தை கண்காணித்து வந்தார்.
பெண் கணக்காளர்
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அவரால் சரியாக நிர்வாகம் செய்ய முடியவில்லை. இதை சாதகமாக பயன்படுத்திய எனது கணவர், அங்கு ரூ.2,500 சம்பளத்தில் கணக்காளராக வேலை பார்த்த கலைச்செல்வி (40) என்பவருடன் சேர்ந்து பல கோடி ரூபாய் மோசடி செய்து உள்ளார்.
மேலும் அந்த பெண்ணுக்கு சம்பளமாக மாதந்தோறும் ரூ.35 ஆயிரம் கொடுத்து வந்துள்ளார். அவர்கள் 2 பேரும் சேர்ந்து எனது நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய ஜி.எஸ்.டி. தொகை மற்றும் தொழில்வரி ஆகியவற்றை பல ஆண்டுகளாக செலுத்த வில்லை.
இதனால் அதிகாரிகள் எங்கள் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பினர்.
அதை தெரிந்து கொண்ட நான் ஊழியர்களிடம் விசாரணை செய்ததில், அந்த ஜி.எஸ்.டி. தொகை மற்றும் தொழில்வரி ஆகியவற்றை செலுத்தியதாக கணக்குகாட்டிவிட்டு அதை அரசுக்கு செலுத்தாமல் மோசடி செய்தது தெரிய வந்தது.
ரூ.4.50 கோடி மோசடி
இது தொடர்பாக எனது கணவரிடம் கேட்டபோது அவர் என்னிடம் தகராறு செய்து பிரிந்து சென்றுவிட்டார்.
எனவே எங்கள் நிறுவனத்தில் மோசடி செய்த எனது கணவர் மற்றும் பெண் கணக்காளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
அதன்பேரில் மோசடி, கூட்டுச்சதி உள்பட 4 பிரிவுகளின் கீழ் ரஞ்சித்குமார், கலைச்செல்வி ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
அதில் ரஞ்சித்குமார், கலைச்செல்வி ஆகியோர் சேர்ந்து ரூ.4 கோடியே 50 லட்சம் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பணத்தில் ரஞ்சித்குமார் ரூ.1 கோடிக்கும் மேல் வீடு மற்றும் நிலம் வாங்கி உள்ளார்.
கலைச்செல்வி ரூ.80 லட்சத்தில் வீடு வாங்கியது தெரியவந்தது. தலைமறைவான 2 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
2 பேர் கைது
இந்த நிலையில் வீரபாண்டிபிரிவு அருகே ஒரு வீட்டில் பதுங்கி இருந்த கலைச்செல்வி மற்றும் மற்றொரு வீட்டில் பதுங்கிய ரஞ்சித்குமார் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரையும் கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.








