5 மையங்களில் 4 ஆயிரத்து 575 பேர் தட்டச்சு தேர்வு எழுதினர்


5 மையங்களில் 4 ஆயிரத்து 575 பேர் தட்டச்சு தேர்வு எழுதினர்
x

திண்டுக்கல் மாவட்டத்தில், 5 மையங்களில் 4 ஆயிரத்து 575 பேர் தட்டச்சு தேர்வு எழுதினர்.

திண்டுக்கல்

தமிழக அரசு பணிகளில் சேருபவர்கள் தமிழ், ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருப்பது கூடுதல் தகுதியாக கருதப்படுகிறது. இதனால் போட்டி தேர்வுக்கு தயாராகுபவர்களில் பெரும்பாலானோர் தற்போது தட்டச்சு பயிற்சி மையங்களுக்கு சென்று தட்டச்சு பயிற்சி பெற்று வருகின்றனர். தமிழகத்தில் சுமார் 1½ லட்சம் பேர் தட்டச்சு பயிற்சி பெறுகின்றனர். இவ்வாறு தட்டச்சு பயிற்சி பெறுபவர்களுக்கு ஆண்டு தோறும் பிப்ரவரி, ஆகஸ்டு மாதங்களில் தேர்வு நடத்தப்படும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தட்டச்சு தேர்வு நடைபெறவில்லை.

இந்த நிலையில் தற்போது தமிழகம் முழுவதும் தட்டச்சு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், பழனி ஆகிய இடங்களில் 5 மையங்களில் நேற்று தட்டச்சு தேர்வு நடந்தது. இதற்காக திண்டுக்கல் ஆர்.வி.எஸ். கல்லூரி, எஸ்.பி.எம். கல்லூரி, ஏ.பி.சி. பாலிடெக்னிக் கல்லூரி, புனித ஜோசப் பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய இடங்களில் 4 தேர்வு மையங்களும், பழனியில் ஒரு தேர்வு மையமும் அமைக்கப்பட்டிருந்தது. தட்டச்சு தேர்வு எழுதுவதற்காக மாவட்டம் முழுவதும் 4 ஆயிரத்து 575 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்கள் அனைவரும் நேற்று தேர்வு எழுதினர். இதில் ஆர்.வி.எஸ். கல்லூரியில் 1,773 பேர், எஸ்.பி.எம். கல்லூரியில் 639 பேர், ஏ.பி.சி. பாலிடெக்னிக் கல்லூரியில் 196 பேர், புனித ஜோசப் பாலிடெக்னிக் கல்லூரியில் 867 பேர், பழனியில் 1,100 பேர் நேற்று தேர்வு எழுதினர். அடுத்த ஆண்டில் இருந்து பிப்ரவரி, ஆகஸ்டு மாதங்களிலேயே தேர்வு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்வு ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.


Next Story