மதுரை மண்டலத்தில் ரேஷன் அரிசி கடத்தியதாக 448 பேர் கைது- 721 டன் பறிமுதல்


மதுரை மண்டலத்தில் ரேஷன் அரிசி கடத்தியதாக 448 பேர் கைது- 721 டன் பறிமுதல்
x

மதுரை மண்டலத்தில் ரேஷன் அரிசி கடத்தியதாக 448 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 721 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் மதுரை மண்டல குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

மதுரை


ரேஷன் அரிசி கடத்தல்

மதுரை மண்டல குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறைக்கு உட்பட்ட பகுதிகளான, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், உத்தமபாளையம், விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, குமரி ஆகிய இடங்களை சேர்ந்த இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், சிறப்புப்பிரிவு போலீசார் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும், கேரள மாநில எல்லைகளிலும் தீவிர ரோந்துப் பணியும் நடைபெற்று வருகிறது.

இதன் காரணமாக 2023 ஜனவரி முதல் அக்டோபர் மாதம் வரை, மதுரை மண்டலத்தில் மட்டும் 1353 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 448 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 721 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய 140 இரு சக்கர வாகனங்கள், 34 மூன்று சக்கர வாகனங்கள், 278 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 452 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவை தவிர அரசு மானியத்தில் வழங்கப்பட்ட வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டரை முறைகேடாக பயன்படுத்தியதாக 169 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 237 கியாஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பெட்ரோல், டீசல் பதுக்கல், கடத்தல் தொடர்பாக 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 22,150 லிட்டர் கலப்பட ஆயில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரேஷன் பருப்பு கடத்தல் தொடர்பாக 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 4,623 கிலோ பருப்பு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

குண்டர் சட்டம்

கேரள மாநிலத்துக்கு ரேஷன் அரிசி தொடர்ந்து கடத்திய 5 பேர் குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கீழமை நீதிமன்றங்களில் விசாரணையில் உள்ள வழக்குகளில் 236 வழக்குகள் முடிக்கப்பட்டு தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட்டு இருக்கிறது. நிலுவையில் உள்ள வழக்குகளில் ஆஜராகாத 15 பேருக்கு பிடிவாரண்டு பெறப்பட்டு நிறைவேற்றப்பட்டு உள்ளது. உணவுப்பொருள் கடத்தல் தொடர்பாக, தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வரும் 130 நபர்களில் 58 நபர்களுக்கு வருவாய் கோட்டாட்சியரிடம் நன்னடத்தை பிணையம் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் மதுரை மண்டலத்துக்குட்பட்ட தமிழக-கேரள எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் வாகன தணிக்கை நடத்தி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் இரு மாநிலங்களுக்கிடையே சிறப்புக் கூட்டம் நடத்தப்பட்டு ரேஷன் அரிசி கடத்தலை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story