நெல்லை ரவுடி வெட்டிக்கொலை: 5 பேரிடம் தனிப்படை போலீசார் விசாரணை


நெல்லை ரவுடி வெட்டிக்கொலை: 5 பேரிடம் தனிப்படை போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 22 May 2024 11:31 AM IST (Updated: 22 May 2024 12:01 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை ரவுடி வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவத்தில் 5 பேரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை,

நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே உள்ள வாகைகுளம் பகுதியை சோ்ந்த ரவுடி தீபக் ராஜா (வயது 30). இவர் மீது நெல்லை, தூத்துக்குடி, சிவகங்கை, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கொலை, கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட 23 வழக்குகள் உள்ளன.

இதனிடையே, தீபக் ராஜா நேற்று முன் தினம் மதியம் நெல்லை-திருச்செந்தூர் ரோட்டில் பாளையங்கோட்டை கே.டி.சி.நகரில் உள்ள பிரபல ஓட்டலில் சாப்பிட வந்துள்ளார். அவர் சாப்பிட்டுவிட்டு ஓட்டலுக்கு வெளியே வந்தபோது 6 பேர் கொண்ட கும்பல் தீபக் ராஜாவை அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை கொண்டு ஓட ஓட சரமாரியாக வெட்டியது. பட்டப்பகலில் நடந்த இச்சம்பவத்தில் ஓட்டல் முன் தீபக்ராஜா ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

தீபக் ராஜாவை வெட்டிக்கொன்ற கும்பல் உடனடியாக அங்கிருந்து காரில் தப்பிச்சென்றனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து உயிரிழந்த தீபக் ராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து விசாரணையை தொடங்கினர். அதில், ஜாதி ரீதியிலான மோதலில் இக்கொலை நடந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியானது. மேலும், இக்கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து சிசிடிவி காட்சிகளை கொண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ரவுடி தீபக் ராஜா வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 5 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் விசாரணை மட்டுமே நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ரகசிய இடத்தில் வைத்து 5 பேரிடமும் பல்வேறு கோணங்களில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லையில் ரவுடி தீபக் ராஜா 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story