விநாயகர் சிலை ஊர்வலத்தை கண்காணிக்க 75 கேமராக்கள்


விநாயகர் சிலை ஊர்வலத்தை கண்காணிக்க 75 கேமராக்கள்
x

புதுக்கோட்டையில் விநாயகா் சிலை ஊர்வலத்தை கண்காணிக்க 75 கேமராக்கள் பொருத்தி போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே நடவடிக்கை எடுத்தார்.

புதுக்கோட்டை

விநாயகர் சதுர்த்தி

விநாயகர் சதுர்த்தி விழா நாளை மறுநாள் (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி விநாயகர் சிலைகள் வைத்து ஆங்காங்கே வழிபாடு நடத்தப்படும். மேலும் 3 நாட்களுக்கு பிறகு ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைப்பது உண்டு. சிலைகள் வைக்க போலீசாரிடம் உரிய அனுமதி பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை சிலைகள் வைக்க அனுமதி கோரி 400 மனுக்கள் வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் 300 மனுக்கள் வர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த மனுக்களை ஆராய்ந்து விநாயகர் சிலை வைக்க போலீசார் அனுமதி வழங்குவார்கள். இதற்கிடையே விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்துவது தொடர்பாக நடைமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.

கண்காணிப்பு கேமராக்கள்

புதுக்கோட்டையில் வருகிற 20-ந் தேதி விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற உள்ளது. விநாயகர் சிலையை புதுக்குளம் கரையில் கரைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சிலையை ஊர்வலமாக கரைக்க எடுத்து வரும் போது குற்றச்சம்பவங்கள் நடக்காமல் தடுக்கவும், விநாயகர் ஊர்வலத்தை கண்காணிக்கவும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே நடவடிக்கை எடுத்தார்.

அதன்படி திருவப்பூர், பி.எல்.ஏ. ரவுண்டானா, கே.கே.சி. கல்லூரி சாலை, பழைய பஸ் நிலையம், கீழ ராஜவீதி, திலகர் திடல், பழனியப்பா கார்னர், மச்சுவாடி, சின்னப்பா பூங்கா ஆகிய பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

கட்டுப்பாட்டு அறை

இதேபோல் புதுக்கோட்டை மாவட்ட எல்லைகளை கண்காணிக்கவும், குற்றச்சம்பவங்கள் நடக்காமல் கண்காணிப்பதற்கு புதுக்கோட்டை உட்கோட்டத்தில் மொத்தம் 75 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை பார்வையிட புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புதியதாக தொடங்கப்பட்டுள்ள நவீன கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு அறையை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே நேற்று திறந்து வைத்தார்.


Next Story