75-வது சுதந்திர தினம்: மெட்ரோ ரெயில் நிலையங்களில் நாளை முதல் கிராமிய கலைநிகழ்ச்சி..!


75-வது சுதந்திர தினம்: மெட்ரோ ரெயில் நிலையங்களில் நாளை முதல் கிராமிய கலைநிகழ்ச்சி..!
x

75-வது சுதந்திர தினத்தையொட்டி மெட்ரோ ரெயில் நிலையங்களில் நாளை முதல் கிராமிய கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

சென்னை,

சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டு விழாவை கொண்டாடிடும் வகையில் சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தமிழ்நாடு கிராமியக் கலைகள் வளர்ச்சி மையத்துடன் இணைந்து மதுரை கலைமாமணி தி.சோமசுந்தரம் குழுவினரின் பல்வேறு கிராமியக் கலை நிகழ்ச்சிகள் மெட்ரோ ரெயில் நிலையங்களில் நடைபெறுகிறது.

காவடியாட்டம், மயிலாட்டம், காளையாட்டம், சிலம்பாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம், தப்பாட்டம் மற்றும் நையாண்டி மேளம் போன்ற கிராமியக் கலை நிகழ்ச்சிகள் பின்வரும் தேதிகளில் மெட்ரோ ரெயில் நிலையங்களில் நடைபெறுகிறது. இந்த கிராமியக் கலை நிகழ்ச்சிகளை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் இயக்குநர் (இயக்கம் மற்றும் அமைப்பு) ராஜேஷ் சதிர்வேதி தொடங்கி வைக்கிறார்.

(12.08.2022) நாளை வெள்ளிக்கிழமை புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையத்திலும், (13.08.2022) சனிக்கிழமை அன்று விம்கோ நகர் மெட்ரோ ரெயில் நிலையத்திலும், (14.08.2022) ஞாயிற்றுக்கிழமை அன்று கிண்டி கத்திப்பாரா நகர்புற சதுக்கத்தில் மற்றும் (15.08.2022) திங்கட்கிழமை சுதந்திர தினத்தன்று அசோக் நகர் மெட்ரோ ரெயில் நிலையத்திலும் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறுகிறது.

75-வது சுதந்திர தினத்தை ஒட்டி நடைபெறும் கிராமியக் கலை நிகழ்ச்சிகளை பொதுமக்கள் கண்டு மகிழ சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் ஏற்பாடுகளைச் செய்துள்ளது. அனைவருக்கும் அனுமதி இலவசம், எனவே மெட்ரோ ரெயில் பயணியர், பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story