அனுமதியின்றி இயங்கிய 8 பட்டாசு கடைகளுக்கு 'சீல்'


அனுமதியின்றி இயங்கிய 8 பட்டாசு கடைகளுக்கு சீல்
x

சிவகாசி, விஸ்வநத்தம் பகுதியில் அனுமதியின்றி இயங்கிய 8 பட்டாசு கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி, விஸ்வநத்தம் பகுதியில் அனுமதியின்றி இயங்கிய 8 பட்டாசு கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

பட்டாசு கடைகள்

சிவகாசி பகுதியில் அனுமதியின்றி பட்டாசு குடோன்கள், கடைகள் இயங்கி வருவதாகவும், மேலும் லாரி செட்டுகளில் பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டு வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதாக அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

இந்தநிலையில் சிவகாசி தாசில்தார் லோகநாதன், தீப்பெட்டி மற்றும் பட்டாசு ஆலைகள் ஆய்வு தனி தாசில்தார் சாந்தி ஆகியோர் நேற்று விஸ்வநத்தம் கிராமத்துக்கு உட்பட்ட பகுதியில் இயங்கி வந்த 8 பட்டாசு கடைகளில் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது அந்த கடைகளின் உரிமங்கள் கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிந்து விட்டது தெரியவந்தது.

சீல் வைக்க உத்தரவு

உரிமத்தை புதுப்பிக்காமல் உரிய அனுமதியின்றி செயல்பட்டதும் தெரியவந்தது. இந்த பட்டாசு கடைகளின் அருகில் தகர செட் அமைத்து அதனை குடோன்களாக பயன்படுத்தி வந்ததும், அந்த தகர செட்டில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான பட்டாசு பெட்டிகள் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

பட்டாசு கடையின் அருகில் விதிகளை மீறி கட்டிடம் கட்டி அதில் பணியாளர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த வருவாய்த்துறை அதிகாரிகள் லோகநாதன், சாந்தி ஆகியோர் 8 பட்டாசு கடைகளுக்கும் சீல் வைக்க உத்தரவிட்டனர். இந்த சம்பவம் குறித்து சிவகாசி கிழக்கு போலீசில் தாசில்தார் புகார் தெரிவித்தார். அதன் பேரில் நாகராஜ், அழகுலட்சுமி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சிவகாசி பகுதியில் இதேபோல் பல கடைகள் உரிய அனுமதியின்றி இயங்கி வருவதாக கூறப்படுகிறது. இதனை அதிகாரிகள் கண்டுபிடித்து அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


Related Tags :
Next Story