சென்னை விமான நிலையத்தில் 8½ கிலோ தங்கம் பறிமுதல்


சென்னை விமான நிலையத்தில் 8½ கிலோ தங்கம் பறிமுதல்
x

சென்னை விமான நிலையத்தில் ரூ.4 கோடியே 55 லட்சம் மதிப்புள்ள 8½ கிலோ தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மீனம்பாக்கம்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு மலேசியாவில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது மலேசியாவை சேர்ந்த 30 வயது வாலிபர் சுற்றுலா விசாவில் சென்னை வந்து இருந்தார்.

அவர் மீது சந்தேகம் கொண்ட சுங்க இலாகா அதிகாரிகள் அவரிடம் விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் சுத்தியலை தங்கத்தில் செய்து அதன் மீது கருப்பு நிற டேப்பை சுற்றி நூதன முறையில் மறைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.1 கோடியே 88 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ 490 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

8½ கிலோ தங்கம்

அதே போல் குவைத்தில் இருந்து துபாய் வழியாக சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையைச் சேர்ந்த சுமார் 45 வயது பயணியின் உடைமைகளை சோதித்தனர். அதில் எமர்ஜென்சி விளக்கு இருந்தது. சந்தேகத்தின் பேரில் அதை பிரித்து பார்த்தபோது அதன் உள்ளே தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து ரூ.2 கோடியே 67 லட்சம் மதிப்புள்ள 4 கிலோ 930 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து நடந்த சோதனையில் சுமார் ரூ.4 கோடியே 55 லட்சம் மதிப்புள்ள 8½ கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக மலேசிய வாலிபர் உள்பட 2 பேரை கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள் மேலும் விசாரித்து வருகின்றனர்.


Next Story