8 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசு தொகுப்பு பெறவில்லை
வேலூர் மாவட்டத்தில் 8 ஆயிரம் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசு தொகுப்பு பெறவில்லை என்று கூட்டுறவு சங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொங்கல் பரிசு தொகுப்பு
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டு அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ரூ.1,000 ரொக்கப்பணம், முழுகரும்பு ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு ரேஷன்கடைகள் மூலம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
அதைத்தொடர்ந்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடு, வீடாக சென்று பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கனை ரேஷன்கடை ஊழியர்கள் வழங்கினர். வேலூர் மாவட்டத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர்கள் என்று மொத்தம் 4 லட்சத்து 50 ஆயிரத்து 204 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
8 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்கள்
தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி கடந்த 9-ந் தேதி தொடங்கியது. வேலூர் தொரப்பாடியில் உள்ள ரேஷன்கடையில் பொங்கல் பரிசு தொகுப்பை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் வழங்கி தொடங்கி வைத்தார்.
அதைத்தொடர்ந்து 699 ரேஷன் கடைகளில் பொங்கல்பரிசு தொகுப்புகள் டோக்கனில் குறிப்பிட்ட நாள், நேரத்தில் வழங்கப்பட்டன. வேலூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகைக்கு முன்பாக சுமார் 95 சதவீதம் பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டிருந்தது.
பொங்கல் பண்டிகையையொட்டி குடும்பத்துடன் வெளியூர் சென்றவர்கள் மற்றும் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக பொங்கல் பரிசு தொகுப்பை வாங்க இயலாதவர்கள் கடந்த 17-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை ரேஷன்கடைகளுக்கு சென்று அதனை வாங்கி கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் பலர் பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கி சென்றனர். வேலூர் மாவட்டத்தில் கடந்த 25-ந் தேதி வரை 4 லட்சத்து 42 ஆயிரத்து 204 பேர் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்கி உள்ளனர். 8 ஆயிரம் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்கவில்லை. என்று கூட்டுறவு சங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.