வாக்காளர் பட்டியலில் 80 ஆயிரம் இரட்டை பதிவுகள்

7 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியலில் 80 ஆயிரம் இரட்டை பதிவுகள் நவீன மென்பொருள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு விசாரணை நடக்கிறது.
இரட்டை பதிவுகள்
இந்திய தேர்தல் ஆணையம் 18 வயது நிரம்பிய அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கிறது. அதேபோல் வாக்காளர் பட்டியலில் எந்தவித தவறும் இல்லாத வகையில் தயாரிக்க திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் இணையதளம் மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம், முகவரி மாற்றம் போன்றவையும் நடக்கிறது.
ஆனால் சிலர் வேறு ஊருக்கு இடம்பெயர்ந்தால், வாக்காளர் பட்டியலில் முகவரியை மாற்றாமல் புதிய வாக்காளராக சேர்ந்து விடுகின்றனர். இதனால் வாக்காளர் பட்டியலில் இரட்டை பதிவுகள் ஏற்பட்டு விடுகின்றன. அவற்றை நீக்க நவீன மென்பொருள் மூலம் இரட்டை பதிவுகள் கண்டறியப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்திலும் வாக்காளர் பட்டியலில் இரட்டை பதிவுகளை கண்டறியும் பணி நடந்தது.
80 ஆயிரம் பதிவுகள்
திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை பழனி, திண்டுக்கல், ஆத்தூர், நத்தம், நிலக்கோட்டை, வேடசந்தூர், ஒட்டன்சத்திரம் ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த 7 தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலில் மொத்தம் 18 லட்சத்து 94 ஆயிரத்து 857 வாக்காளர்கள் இடம்பெற்று உள்ளனர். இந்த நிலையில் வாக்காளர் பட்டியலில் இரட்டை பதிவுகளை கண்டறியும் பணி நடந்தது.
அதில் வாக்காளர் பட்டியலில் உள்ள புகைப்படத்தின் அடிப்படையில் உருவ ஒற்றுமை, பெயர், முகவரி அடிப்படையில் சுமார் 80 ஆயிரம் இரட்டை பதிவுகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து இரட்டை பதிவுகளின் உண்மை தன்மையை அறிய 7 தொகுதிகளிலும் களவிசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதன் முடிவில் ஒருவருக்கு 2 இடங்களில் வாக்குரிமை இருந்தால் ஒருஇடத்தில் நீக்கம் செய்யப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.






