9 சமையல் கியாஸ் சிலிண்டர்கள் பறிமுதல்
வீட்டில் பதுக்கி வைத்த 9 சமையல் கியாஸ் சிலிண்டர்கள் பறிமுதல்
கள்ளக்குறிச்சி
சங்கராபுரம் அருகே அரசம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் மாயவன் மகன் குணசேகரன்(வயது 39). இவர் அவருடைய வீட்டில் சமையல் கியாஸ் சிலிண்டர்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக கள்ளக்குறிச்சி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையில் போலீசார் அரசம்பட்டு கிராமத்துக்கு சென்று குணசேகரன் வீட்டில் சோதனை செய்தபோது அங்கே 9 சமையல் கியாஸ் சிலிண்டர்கள் இருந்ததை கண்டுபிடித்தனர்.
விசாரணையில் லைசென்ஸ் இல்லாமல் சமையல் கியாஸ் சிலிண்டர்களை பதுக்கி வைத்து டீக்கடை மற்றும் ஓட்டல்களுக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தொியவந்தது. இதையடுத்து குணசேகரன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 9 சிலிண்டர்களையும் பறிமுதல் செய்தனர். போலீசார் வருவதை அறிந்து கொண்ட குணசேகரன் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.