காரைக்குடியில் தான் படித்த பள்ளியில் மாணவர்களுக்கு பாடம் எடுத்த 97 வயது சுதந்திர போராட்ட வீரர்


காரைக்குடியில் தான் படித்த பள்ளியில்  மாணவர்களுக்கு பாடம் எடுத்த    97 வயது சுதந்திர போராட்ட வீரர்
x

காரைக்குடியில் தான் படித்த பள்ளியில் 97 வயது சுதந்திர போராட்ட வீரர் மாணவர்களுக்கு பாடம் எடுத்தார்

சிவகங்கை

காரைக்குடி,

காரைக்குடி முத்துப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 97). கடந்த 1925-ம் ஆண்டு காரைக்குடியில் பிறந்த இவர் சுதந்திர போராட்டத்தில் அதிக ஈடுபாடு கொண்டதால் கம்பன் அடிப்பொடி சா.கணேசனாருடன் சுதந்திரா கட்சியில் சேர்ந்து சுதந்திரா கட்சியின் சட்ட மன்ற செயலாளராகவும் பணியாற்றி உள்ளார். மகாத்மா காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களுடன் இணைந்து பல்வேறு சுதந்திர போராட்ட போராட்டங்களில் பங்கேற்று சிறையும் சென்றுள்ளார். அப்போதைய பிரிட்டிஷ் அரசாங்கம் கம்பன் அடிப்பொடி சா.கணேசனாரை தேசதுரோகி வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தபோது கடந்த 1942-ம் ஆண்டு தேவகோட்டை கோர்ட்டு எரிப்பு சம்பவத்தில் இவர் கலந்துகொண்டு போராடியதால் அரசின் சொத்திற்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட 16 வழக்குகளை பிரிட்டிஷ் அரசு இவர் மீது போட்டு 6 மாதம் சிறையில் அடைத்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ராமசாமி தான் 9-ம் வகுப்பு வரை படித்த காரைக்குடி எஸ்.எம்.எஸ்.வி. மேல்நிலைப்பள்ளிக்கு தனது மகன்களுடன் வந்து அங்குள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை சந்தித்து உரையாடினார். அவரை தலைமையாசிரியர் அண்ணாமலை, ஆசிரியர்கள் சுந்தரராமன், செந்தில்குமார் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் அவர் மாணவர்களுக்கு சுதந்திர போராட்டம் தொடர்பாக பாடம் நடத்தினார். அப்போது அவர் பேசுகையில், மாணவர்கள் நன்றாக படித்து வாழ்க்கையில் நல்ல தலைவர்களாக வர வேண்டும். தமிழகத்தில் சுதந்திர போராட்டங்களில் பங்கேற்ற வீரர்களில் தற்போது 10 பேர் மட்டுமே உயிரோடு இருப்பார்கள். அதில் நானும் ஒருவன். இந்த நாட்டில் வாழும் அனைவரும் நமது சுதந்திரத்திற்காக போராடி வீரமரணம் அடைந்த தலைவர்களை எண்ணி பார்க்க வேண்டும் என்றார்.


Next Story