நாதல்படுகை செல்லும் சாலையில் தடுப்புச் சுவர், வடிகால் வசதி செய்து தரப்படும்

கொள்ளிடம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் லலிதா, நாதல்படுகை செல்லும் சாலையில் தடுப்புச்சுவர், வடிகால் செய்து தரப்படும் என்று உறுதி அளித்தார்.
கொள்ளிடம்:
கொள்ளிடம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் லலிதா, நாதல்படுகை செல்லும் சாலையில் தடுப்புச்சுவர், வடிகால் செய்து தரப்படும் என்று உறுதி அளித்தார்.
வெள்ளத்தால் பாதிப்பு
மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டியதால் அங்கிருந்து உபரிநீர் அதிகளவு திறந்து விடப்படுகிறது. அந்த தண்ணீர் கல்லணையை வந்தடைந்து அங்கிருந்து காவிரி, கொள்ளிடத்தில் திறந்து விடப்படுகிறது. இதன் காரணமாக கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது ஆற்றின் கரையோரம் உள்ள நாதல்படுகை கிராமத்தையும், அங்குள்ள விளைநிலங்களையும் தண்ணீர் சூழ்ந்து விடுகிறது. நாதல்படுகை கிராமத்துக்கு செல்லும் சாலையையும் தண்ணீர் சூழ்ந்து விடுவதால் மழைக்காலங்களில் கிராம மக்கள் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டு விடுகிறது. தற்போதும் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் நாதல்படுகை கிராமத்தை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
கலெக்டர் உறுதி
இந்தநிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அப்பகுதி கிராம மக்களின் கோரிக்கையினை ஏற்று நாதல்படுகை கிராமத்துக்கு செல்லும் சாலையின் முக்கியமான இடத்தில் இரண்டு பக்கங்களிலும் 500 மீட்டர் தூரத்துக்கு தடுப்புச் சுவர் அமைக்கவும், வடிகால் வசதி ஏற்படுத்தி தரவும், அப்பகுதியில் புயல் வெள்ள பாதுகாப்பு மையம் கட்டி தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.அதனைத் தொடர்ந்து அளக்குடி கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றின் வலது கரையில் தண்ணீர் மோதி திரும்பும் பகுதியை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதிகாரிகள்
அவருடன், சீர்காழி தாசில்தார் செந்தில்குமார், மயிலாடுதுறை காவிரி வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் சண்முகம், சீர்காழி உதவி செயற்பொறியாளர் விஜயகுமார், கொள்ளிடம் உதவி பொறியாளர் சிவசங்கரன், வேளாண் உதவி இயக்குனர் எழில்ராஜா, வருவாய் ஆய்வாளர் தமிழ்வேந்தன், ஊராட்சி மன்ற தலைவர் கனகராஜ் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.






