திண்டிவனம் அருகே குளிர்பானம் குடித்த சிறுவன் திடீர் சாவு ஓடும் பஸ்சில் தாயின் மடியில் உயிரைவிட்ட பரிதாபம்


திண்டிவனம் அருகே    குளிர்பானம் குடித்த சிறுவன் திடீர் சாவு    ஓடும் பஸ்சில் தாயின் மடியில் உயிரைவிட்ட பரிதாபம்
x

திண்டிவனம் அருகே குளிர்பானம் குடித்த சிறுவன் ஓடும் பஸ்சில் தாயின் மடியில் உயிரை விட்டான்.

விழுப்புரம்

திண்டிவனம்,

சென்னை மயிலாப்பூர்

சென்னை மயிலாப்பூர் பகுதியை சேர்ந்தவர் ஜெபஸ்டின்ராஜ் (வயது 43). இவர் அதே பகுதியில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி பொற்செல்வி (36). இவர்களுக்கு ஏஞ்சலின் செல்வ அனுசுயா(16) என்ற மகளும், ஆன்டனிஜான் ரோஷன்(14) என்ற மகனும் உள்ளனர்.

இந்த நிலையில் பொற்செல்வி தனது மகன், மகளுடன் தாய் ஊரில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்ரீவில்லிபுத்தூருக்கு சென்றார். பின்னர் அவர் கோவில் திருவிழாவை முடித்து விட்டு நேற்று முன்தினம் இரவு தனது குடும்பத்தினருடன் அரசு பஸ் மூலம் சென்னைக்கு புறப்பட்டார்.

செல்லும் வழியில் மதுரை அருகே அழகாபுரி என்ற ஊரில் உள்ள ஓட்டலில் பஸ் நிறுத்தப்பட்டது. அப்போது அங்குள்ள ஒரு கடையில் பொற்செல்வி தனது மகன் ஆன்டனிஜான் ரோஷனுக்கு குளிர்பானம் வாங்கி கொடுத்துள்ளார். அதனை குடித்த பிறகு ஆன்டனிஜான் ரோஷன் திடீரென வாந்தி எடுத்தான். அதைத் தொடர்ந்து 4 முறை வாந்தி எடுத்துள்ளான்.

சிறுவன் சாவு

இதனால் சோர்வடைந்த அவனை பொற்செல்வி தனது மடியில் படுக்க வைத்துக் கொண்டு பஸ்சில் பயணம் செய்தார். அந்த பஸ் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கூட்டேரிப்பட்டு வந்தபோது, டிரைவர் டீ குடிப்பதற்காக சாலையோர ஓட்டலில் பஸ்சை நிறுத்தினாா். அப்போது பொற்செல்வி தனது மகனை டீ குடிப்பதற்காக எழுப்பினார். ஆனால் அவன் எழுந்திருக்கவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த பொற்செல்வி சகபயணிகள் உதவியுடன் தனது மகனை அதே பஸ் மூலம் திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவனை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ஆன்டனிஜான் ரோஷன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

தாயின் மடியில்...

இதைகேட்ட பொற்செல்வி, அவனது அக்காள் ஏஞ்சலின் செல்வ அனுசுயா ஆகியோர் கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து பொற்செல்வி கொடுத்த புகாாின் பேரில் திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குளிர்பானம் குடித்ததால் சிறுவன் உயிரிழந்தானா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உண்டா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறார்கள்.

உயிரிழந்த சிறுவன் சென்னை மயிலாப்பூர் பகுதியில் உள்ள ஒருதனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான் என்பது குறிப்பிடத்தக்கது. குளிர்பானம் குடித்த சிறுவன் ஓடும் பஸ்சில் தாயின் மடியிலேயே உயிரிழந்த சம்பவம் சக பயணிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story