குடிபோதையில் மோட்டார்சைக்கிளை ஓட்டிவந்ததால் வழக்கு போலீஸ்காரருடன் தகராறு செய்த வாலிபர்கள்- ஒருவர் கைது


குடிபோதையில் மோட்டார்சைக்கிளை ஓட்டிவந்ததால் வழக்கு போலீஸ்காரருடன் தகராறு செய்த வாலிபர்கள்- ஒருவர் கைது
x
தினத்தந்தி 4 July 2023 6:14 AM GMT (Updated: 4 July 2023 6:15 AM GMT)

குடிபோதையில் மோட்டார்சைக்கிளை ஓட்டி வந்ததாக வழக்குப்பதிவு செய்ததால் போலீஸ்காரருடன் தகராறு செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார். மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை

சென்னை வியாசர்பாடி போலீசார் நேற்று முன்தினம் இரவு பெரம்பூர் ஏ.ஏ.ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது அவர் குடிபோதையில் மோட்டார்சைக்கிளை ஓட்டி வந்தது தெரிந்தது. அவரிடம் வியாசர்பாடி போலீஸ்காரர் சிவகுமார் விசாரித்த போது, அவர் வியாசர்பாடி ரத்தினம் தெருவைச் சேர்ந்த பிரகாஷ் தினகரன் (வயது 30) என்பது தெரிந்தது.

போலீஸ்காரர் சிவகுமார், குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக பிரகாஷ் தினகரன் மீது வழக்குப்பதிவு செய்வதற்காக அவரை பெரம்பூர் ெரயில் நிலையம் எதிரே உள்ள போக்குவரத்து போலீசாரிடம் அழைத்துச் சென்றார்.

அப்போது பிரகாஷ் தினகரன், இதுபற்றி செல்போனில் தனது நண்பர்களுக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக வக்கீல்களான மணிக்குமார், லோகேஷ்வரன் உள்பட 3 பேர் குடிபோதையில் மற்றொரு மோட்டார்சைக்கிளில் அங்கு வந்து போலீஸ்காரர் சிவகுமாரிடம், "எப்படி நீங்கள் வழக்கு போடலாம்?" என கேட்டு தகராறு செய்து, பிரகாஷ் தினகரனை அங்கிருந்து தப்பிக்க செய்ய முயன்றனர்.

ஆனால் சுதாரித்துக்கொண்ட போலீஸ்காரர் சிவகுமார், அவரை பிடித்துக்கொண்டார். அப்போது 4 பேரும் சேர்ந்து பொதுமக்கள் மத்தியில் போலீஸ்காரர் சிவகுமாரை அவமரியாதை செய்து, தரக்குறைவாக பேசி, பணி செய்ய விடாமல் தடுத்தனர். இதை கண்ட பொதுமக்கள் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக வியாசர்பாடி மற்றும் செம்பியம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து குடிபோதையில் இருந்த பிரகாஷ் தினகரன் மீது குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவர்களை அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீஸ்காரர் சிவகுமார் அளித்த புகாரின்பேரில் செம்பியம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, போலீஸ்காரருடன் தகராறு செய்து தரக்குறைவாக பேசியதாக மணிக்குமார், லோகேஸ்வரன், பிரகாஷ் தினகரன் உள்பட 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். இவர்களில் பிரகாஷ் தினகரனை கைது செய்த போலீசார், தலைமறைவான மற்ற 3 பேரையும் தேடி வருகின்றனர்.


Next Story