2 குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற தம்பதியால் பரபரப்பு
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் 2 குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற தம்பதியால் பரபரப்பு
கள்ளக்குறிச்சி
உளுந்தூர்பேட்டை அருகே சேந்தநாடு கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணதாஸ் (வயது 45). இவர் நேற்று மதியம் அவரது மனைவி வைதேகி, 8 வயது பெண் மற்றும் 7 வயது ஆண் குழந்தைகளுடன் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் அவர் தான் கொண்டுவந்த பாட்டிலில் இருந்த பெட்ரோலை தன் மீதும், மனைவி மற்றும் குழந்தைகள் மீதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதைப்பார்த்து அங்கே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் கலெக்டரின் உதவியாளர்கள் ஓடி சென்று அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினார்கள்.
பின்னர் கிருஷ்ணதாசிடம் போலீசார் நடத்திய விசாரணையில், சேந்தநாடு கிராமத்தில் தள்ளுவண்டியில் இட்லி கடை வைத்து வியாபாரம் செய்து வரும் புதுச்சேரியை சேர்ந்த பாலகிருஷ்ணனின் மனைவி வள்ளிக்கு அதேபகுதியில் ஒரு வீடு உள்ளது. மேலும் இவர் பலபேரிடம் வாங்கிய கடனை திருப்பி செலுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது. வள்ளி தனது வீ்ட்டை சுரேஷ் என்பவரிடம் அடமானம் வைத்து வாங்கிய கடனை குறித்த காலத்துக்குள் திருப்பி செலுத்தாததால் அந்த வீ்ட்டை சுரேசுக்கே கிரையம் செய்து கொடுத்தார். இதற்கு சுரேசின் நண்பரான கிருஷ்ணதாஸ் சாட்சி கையெழுத்து போட்டு உள்ளார். பின்னர் வள்ளி வெளியூருக்கு சென்று தலைமறைவாகிவிட்டார். இதனால் அவருக்கு கடன் கொடுத்தவர்கள் கிருஷ்ணதாசின் வீட்டுக்கு சென்று அவரை திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகவும், இதுபற்றி திருநாவலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் மனமுடைந்த அவர் குடும்பத்துடன் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து கிருஷ்ணதாசுக்கு போலீசார் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர். 2 குழந்தைகளுடன் தம்பதி தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.