புதுக்கோட்டை ரெயில்வே கேட்டில் அரசு பஸ் பழுதாகி நின்றதால் பரபரப்பு


புதுக்கோட்டை ரெயில்வே கேட்டில் அரசு பஸ் பழுதாகி நின்றதால் பரபரப்பு
x

புதுக்கோட்டை ரெயில்வே கேட்டில் அரசு பஸ் பழுதாகி நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அசம்பாவிதம் ஏற்படாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

புதுக்கோட்டை

பழுதாகி நின்றது

காரைக்குடியில் இருந்து புதுக்கோட்டை வழியாக திருச்சிக்கு அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்நிலையில், அந்த பஸ் புதுக்கோட்டை அருகே கருவேப்பிலான் ரெயில்வே கேட் அருகில் வந்தது. அப்போது திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்கு காரைக்குடி-திருச்சி எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது. இதைத்தொடர்ந்து ரெயில் கடப்பதற்காக ஊழியர் கேட்டை மூடினார்.

இதற்கிடைேய கேட் முழுவதுமாக மூடுவதற்குள் பஸ் கேட்டுக்கு உள்ளே சிறிது தூரம் வந்து எதிர்பாராதவிதமாக பழுதாகி நின்றது. இதனால் ரெயில்வே கேட் கம்பம் பஸ்சின் மேல் பகுதியில் மோதியபடி நின்றது. இரண்டு கேட்டின் ஒரு பகுதி முழுவதுமாக மூடியும், மற்றொரு பகுதி பஸ்சின் மேல்பகுதியில் மோதியபடி இருந்தது.

பெரும் விபத்து தவிர்ப்பு

இதைத்தொடர்ந்து பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்து பஸ்சில் இருந்து அவசரமாக கீழே இறக்கினர். பின்னர் அவர்கள் உயிருக்கு பயந்து அங்கிருந்து சிறிது தூரம் சென்று நின்றனர். பஸ் தண்டவாளத்தில் பழுதாகி நின்று இருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டு இருக்கும். அதிர்ஷ்டவசமாக ரெயில்வே கேட் அருகே பழுதாகி நின்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இதனிடையே ரெயில்வே ஊழியர்கள், அங்கிருந்த பொதுமக்களை ரெயில் கடக்கும் வரை பஸ் அருகே செல்ல அனுமதிக்கவில்லை. இதைத்தொடர்ந்து ரெயில், கேட்டை கடந்த பின் அங்கிருந்த பொதுமக்கள் பஸ்சை தள்ளி சாலைக்கு கொண்டு வந்தனர். அதன்பின் பஸ்சை பழுதுநீக்கி எடுத்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பரபரப்பு

இப்பகுதியில் ரெயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும் என்று பல்வேறு அமைப்பினர் பல ஆண்டுகளாக கோரிக்கைகள் விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் ரெயில் வரும் நேரத்தில் அரசு பஸ் திடீரென ரெயில்வே கேட்டில் பழுதாகி நின்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story