சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய காவலர் குடியிருப்பு


சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய காவலர் குடியிருப்பு
x

வெள்ளியணையில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய பழுதடைந்த காவலர் குடியிருப்பை அகற்றி பெண்களின் பாதுகாப்பை அதிகாரிகள் உறுதி செய்வார்களா? என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கரூர்

காவலர் குடியிருப்பு

கரூா் மாவட்டம், தாந்தோன்றி ஒன்றியத்தை சோ்ந்த வெள்ளியணை, ஜெகதாபி, உப்பிடமங்கலம், ஏமூா், மணவாடி, மூக்கணாங்குறிச்சி, பாகநத்தம், காக்காவாடி, கே.பிச்சம்பட்டி, கடவூா் ஒன்றியத்தை சோ்ந்த காளையபட்டி ஆகிய 10 தாய் கிராமங்களை சோ்ந்த 151 குக்கிராமங்களில் குற்ற செயல்கள் நடைபெறாமல் தடுக்கவும், குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை கண்டறிந்து தண்டனை பெற்றுத்தரவும், சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டவும் வெள்ளியணையில் கடந்த 1950-ம் ஆண்டு போலீஸ் நிலையம் தொடங்கப்பட்டது.

இதற்காக போலீஸ் நிலைய கட்டிடமும், இங்கு பணிபுாியும் போலீசாருக்கு குடியிருப்புகளும் அதே காலகட்டத்தில் கட்டப்பட்டது. இந்த இரு கட்டிடங்களும் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் சுவர்களில் விரிசல் ஏற்பட்டும், கான்கிரீட்கள் பெயர்ந்தும், இடிந்து விழக்கூடிய நிலை ஏற்பட்டதால் போலீஸ் நிலையத்தையும், காவலர் குடியிருப்புகளையும் இடித்து விட்டு புதிய கட்டிடங்கள் கட்டித்தர வேண்டும் என பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதனை தொடர்ந்து போலீஸ் நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு தற்போது பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

சமூக விரோத செயல்கள்

ஆனால் காவலர் குடியிருப்புகள் புதிதாக கட்டப்படாததால் பழைய கட்டிடம் சேதமடைந்து வசிப்பதற்கு உகந்ததாக இல்லாமல் மாறிப்போனது. இதனால் இங்கு குடியிருந்த போலீசார் அனைவரும் குடியிருப்பை காலி செய்துவிட்டு, தாந்தோணிமலை, கரூா் ஆகிய பகுதிகளில் குடும்பத்துடன் தங்கி உள்ளனர். தற்போது பயன்பாட்டில் இல்லாத குடியிருப்பு கட்டிடம் புதர்கள் மண்டி பாழடைந்த நிலையில் உள்ளது. மேலும் கரூர் மற்றும் தாந்தோணிமலை பகுதிகளில் வசிக்கும் போலீசாருக்கு பணிக்கு வருவதிலும், பணிமுடித்து வீட்டுக்கு செல்வதிலும் வீண் அலைச்சலும், காலவிரயமும் ஏற்படுவதுடன் பொதுமக்களின் சேவையிலும் தாமதம் உண்டாகிறது.

மேலும் பஸ் நிறுத்தம் அருகில் அமைந்துள்ள இந்த பயன்பாட்டில் இல்லாத பாழடைந்த காவலர் குடியிருப்பு பகுதியானது அந்த பகுதியில் நடமாடும் மது பிரியர்களின் மது அருந்தும் கூடாரமாகவும், சமூக விரோத செயல்கள் நடைபெறும் இடமாகவும் மாறி வருகிறது. இதைத் தடுக்க இந்த பாழடைந்த பழைய கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டி தந்தால் சமூக விரோத செயல்கள் தடுக்கப்படுவதுடன் காவலர்களுக்கு புதிய குடியிருப்பும் கிடைக்கும்.

விரும்பத்தகாத செயல்கள்...

இதுகுறித்து வெள்ளியணையை சேர்ந்த சமூக ஆர்வலர் மணிகண்டன் கூறுகையில், இந்த காவலர் குடியிருப்பு கட்டிடம் 10 ஆண்டுகளுக்கு மேலாகவே பயன்பாட்டில் இல்லாமல் இருந்து வருகிறது. பல பகுதிகளிலும் புதிய காவலர் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ள நிலையில் இங்கு மட்டும் புதிய காவலர் குடியிருப்பு கட்டப்படாமல் உள்ளது. இந்த பகுதி புதர் மண்டி காணப்படுவதால் பஸ் நிறுத்தத்தில் பஸ் ஏற காத்திருக்கும் பலரும், இயற்கை உபாதை கழிப்பதற்கு இந்த பகுதியை பயன்படுத்தி வருகின்றனர். பெண்கள் தனியாக இயற்கை உபாதை கழிக்க இந்த பகுதிக்கு வரும்போது அவர்கள் அணிந்திருக்கும் நகைகளை பறித்து செல்லவும், மற்ற விரும்பத்தகாத செயல்கள் நடைபெறவும் வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றார்.

மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லை

வெள்ளியணையை சேர்ந்த சதீஷ் கூறுகையில், இந்த பாழடைந்த கட்டிடத்தின் அருகிலேயே அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பலரும் இடைவேளை மற்றும் மதிய உணவு நேரங்களில் இந்த பகுதியில் நடமாடவும், விளையாடவும் செய்கின்றனர். இதனால் புதர் பகுதியில் உலவும் விஷ ஜந்துக்கள் அவர்களை கடிக்கவும், தற்போது தொடர் மழைக்காலமாக இருப்பதால் பாழடைந்த கட்டிடம் இடிந்து விழக்கூடிய சூழ்நிலையில் உள்ளதால், அதில் சிக்கி ஆபத்தில் மாட்டி கொள்ளக்கூடிய நிலையும் உள்ளது. எனவே இந்த பாழடைந்த கட்டிடத்தையும், புதரையும் அகற்ற அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார். இதேபோல் இப்பகுதி பெண்கள் கூறுகையில், இப்பகுதியில் சட்ட விரோத செயல்கள் அதிகம் நடப்பதால் பெண்களுக்கு பாதுகாப்பு அற்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே விபரீதங்கள் ஏதேனும் ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த பழுதடைந்த காவலர் குடியிருப்பு கட்டிடங்களை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.


Next Story