மீன்பிடிக்க சென்றபோது கூவம் ஆற்றில் தவறி விழுந்த தொழிலாளி பலி


மீன்பிடிக்க சென்றபோது கூவம் ஆற்றில் தவறி விழுந்த தொழிலாளி பலி
x

கூவம் ஆற்றில் மீன்பிடிக்க சென்ற தொழிலாளி ஆற்றில் தவறி விழுந்து பலியானார்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம் அருகே உள்ள கூவம் புதிய காலனி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் விநாயகம் (வயது 53). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி மனைவியும் மற்றும் 2 பெண் பிள்ளைகள் உள்ளனர்.

கணவன்- மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 5 வருடங்களாக இருவரும் தனித்தனியாக பிரிந்து வசித்து வருகிறார்கள். விநாயகம் கூவம் ஏரியில் அடிக்கடி சென்று மீன் பிடித்து வருவது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த 23-ந்தேதியன்று வீட்டில் இருந்து கூவம் ஆற்றிக்கு மீன் பிடிக்க சென்ற விநாயகம் வீடு திரும்பவில்லை. இதனால் பதறிப்போன அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

நேற்று முன்தினம் கூவம் ஆற்றில் இறந்த நிலையில் விநாயகம் உடல் மிதப்பதாக அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் மப்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் விநாயகம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விநாயகம் ஆற்றில் மீன் பிடிக்கும் போது தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறார்கள்.


Next Story