தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது: அமைச்சர் தகவல்


தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது: அமைச்சர் தகவல்
x

தேசிய நெடுஞ் சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்று பலமுறை மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டு இருப்பதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

சென்னை,

சட்டசபையில், கேள்வி நேரத்தில், புதுக்கோட்டை எம்.எல்.ஏ. முத்துராஜா (தி.மு.க.), புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் இருந்து பிருந்தாவனம், அண்ணாசாலை வழியாக மாலையீடு வரை செல்லும் சாலை நகரத்தின் மையப்பகுதியில் உள்ளது.

காலை மற்றும் மாலை நேரங்களில் பணிக்கு செல்லும் அரசு ஊழியர்கள், பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அதிகளவில் இந்த சாலையில் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே இந்த சாலையை 4 வழிச்சாலையாக தரம் உயர்த்த வேண்டும் என்றார்.

இதற்கு பதில் அளித்து அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது:-

தேசிய நெடுஞ்சாலைகள் என்று சொல்லப்படுகின்ற சாலைகள் எல்லாம், 7 மீட்டர் மாநில சாலைகளை எடுத்து, 10 மீட்டர் சாலையாக்கப்பட்டு, சுங்கச்சாவடி போடுவதையெல்லாம் நாம் பார்க்கிறோம். சுங்கச்சாவடிகளை எடுத்துவிட வேண்டும் என்று இந்த அரசு பலமுறை மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், தமிழ்நாட்டில் இருக்கிற சாலைகள் எல்லாம் 4 வழி சாலையாகத் தரம் உயர்த்துவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கூறினார்.

நடவடிக்கை

இந்த அரசு புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், முதல்-அமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டம் என்கிற திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அந்த அடிப்படையில் தான், மாநில நெடுஞ்சாலைகள் எல்லாம் 4 வழிச் சாலைகளாக தரம் உயர்த்தப்படுகின்றன. அங்கே சுங்கச்சாவடி எல்லாம் போடுவதில்லை. பொதுவாக, நகரப் பகுதிகளில் இரண்டு விதமான சாலைகள் உள்ளன.

ஒன்று, நகராட்சிக்கு சொந்தமான நகராட்சி சாலைகளாகும். மற்றொன்று மாநில சாலைகளாகும். உறுப்பினர் கூறுகின்ற அந்த சாலை எந்தச் சாலை என்பதை ஆய்வு செய்து, போக்குவரத்துச் செறிவு இருக்குமேயானால், முதல்-அமைச்சரின் அனுமதியுடன், அடுத்து வருகின்ற நிதியாண்டில் துறையின் சார்பாக பணிகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

திருச்சி-காரைக்குடி தேசிய நெடுஞ்சாலை, வடுகம்பட்டி-எல்.ஐ.சி. காலனி சாலை சந்திக்கும் இடத்தில் ரவுண்டானா அமைக்க அரசு முன் வருமா? என்று தி.மு.க. உறுப்பினர் இனிகோ இருதயராஜ் (திருச்சி கிழக்கு) கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் எ.வ.வேலு, போக்குவரத்து செறிவு, சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


Next Story