டயர் வெடித்ததால் சாலை தடுப்புசுவர் மின்கம்பத்தில் லாரி மோதி விபத்து


டயர் வெடித்ததால் சாலை தடுப்புசுவர் மின்கம்பத்தில் லாரி மோதி விபத்து
x

ஆம்பூர் அருகே எண்ணெய் ஏற்றி வந்த லாரியின் டயர் வெடித்து சாலை தடுப்பு சுவரில் இருந்த மின்கம்பத்தில் மோதியதில் வாலிபர் பலியானார். டிரைவர் உள்பட 2 பேர் படுகாயமடைந்தனர்.

திருப்பத்தூர்

டயர் வெடித்து விபத்து

வேலூரில் இருந்து ஆம்பூர் நோக்கி சமையல் எண்ணெய் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நேற்று புறப்பட்டது. லாரியை ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியை சேர்ந்த பாலாஜி (வயது 27) என்பவர் ஓட்டி வந்தார். அதே பகுதியை சேர்ந்த சிவகுமார் (27) மற்றும் சீனிவாசன் (23) ஆகியோர் லாரியில் உடன் வந்துள்ளனர்.

ஆம்பூரை அடுத்த ஜமீன் பகுதியில் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் லாரி வந்து கொண்டிருந்தபோது திடீரென லாரியின் முன்பக்க டயர் வெடித்தது. இதில் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவர் மற்றும் மின்விளக்கு கம்பம் மீது மோதி விபத்துக்குள்ளானது.

வாலிபர் பலி

இதில் லாரியில் பயணம் செய்த சிவக்குமார் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பாலாஜி மற்றும் சீனிவாசன் ஆகியோ படுகாயம் அடைந்தனர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக ஆம்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்பூர் தாலுகா போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத்துறை ரோந்து போலீசார் விபத்தில் சிக்கிய பாலாஜி மற்றும் சீனிவாசன் ஆகியோரை மீட்டு மாதனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

விபத்தில் இறந்த சிவகுமாரின் உடலை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story