லாரி டிரைவரை வழிமறித்து தாக்குதல்
தியாகதுருகம் அருகே லாரி டிரைவரை வழிமறித்து தாக்குதல் தலைமறைவு குற்றவாளி உள்பட 2 பேர் கைது
கண்டாச்சிமங்கலம்
தியாகதுருகம் அருகே சூ.பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் வேல்முருகன்(வயது 33). லாரி டிரைவரான இவர் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் சூளாங்குறிச்சியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்ற போது, அங்கு அதே கிராமத்தை சேர்ந்த சிலர் குடிபோதையில் சண்டை போட்டு கொண்டிருந்ததை இவர் தடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வேல்முருகன் சூளாங்குறிச்சியில் உள்ள தனது நண்பர் செல்லக்கண்ணுவை மோட்டார் சைக்கிளில் டாஸ்மாக் கடைக்கு அழைத்து சென்று விட்டு மீண்டும் அவரை சூளாங்குறிச்சியில் விட்டு விட்டு சூ.பள்ளிப்பட்டு நோக்கி வந்து கொண்டிருந்தார். மாரியம்மன் கோவில் அருகே வந்தபோது அவரை சூளாங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த மணிவேல் மகன் தங்கபாண்டியன்(25), கோவிந்தராஜ் மகன் பவன்குமார்(30) மண்ணாங்கட்டி மகன் சுபாஷ்(24), பலராமன் மகன் பாஸ்கர்(30), சேகர் மகன் சுதாகர் ஆகியோர் வழிமறித்து திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வேல்முருகன் கொடுத்த புகாரின் பேரில் தங்கபாண்டியன் உள்பட 5 பேர் மீது தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கபாண்டியன், பவன்குமார் ஆகியோரை கைது செய்தனர். இதே போல் சுபாஷ் கொடுத்த புகாரின் பேரில் வேல்முருகன் மற்றும் அடையாளம் தெரியாத 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான தங்கபாண்டியன் மீது தியாதுருகம் போலீஸ் நிலையத்தில் சில வழக்குகள் நிலுவையில் உள்ளதும், எஸ்சி.எஸ்டி. வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளி என்பதும் குறிப்பிடத்தக்கது.