ஆடு வாங்க கொடுத்த பணத்தை பதுக்கிவிட்டு 2 ஆடுகளை திருடிச்சென்றவர் கைது

ஆடு வாங்க கொடுத்த பணத்தை பதுக்கிவிட்டு 2 ஆடுகளை திருடிச்சென்றவர் கைது செய்யப்பட்டார்.
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டையை அடுத்த புள்ளானேரி ஊராட்சி சின்ன குட்டூர் பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி. இவரது மனைவி பூங்கொடி (வயது 50), கடந்த 6-ம் தேதி காலை நிலத்தில் 3 ஆடுகளை மேய்ச்சலுக்காக கட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். சிறிது நேரத்தில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் மொபட்டில் அங்கு வந்தார். அவர் இரண்டு பெரிய ஆடுகளை கழுத்தில் இருந்த கயிறை அவிழ்த்து கால்களை கட்டி மொபட்டின் முன் பகுதியில் வைத்துக் கொண்டு சென்றுள்ளார்.
இந்த நிலையில் பூங்கொடி வந்்தபோது குட்டி ஆடு மட்டுமே இருந்ததையும் 2 பெரிய ஆடுகள் மாயமானதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அப்போது அந்த பகுதியில் இருந்தவர்கள் மொபட்டில் 2 ஆடுகளை எடுத்துச் சென்றதாக தெரிவித்தனர். இது குறித்து ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் பூங்கொடி புகார் அளித்தார். போலீசார் சி.சி.டி.வி.கேமரா மூலம் கண்காணித்தபோது மொபட்டில் 2 ஆடுகளுடன் சென்றவர்தான் பூங்கொடி ஆடுகளை திருடியது தெரிய வந்தது. அவரது முகவரியை கண்டுபிடித்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர் நாட்டறம்பள்ளியை அடுத்த பச்சூர் பழைய பேட்டை பகுதியை சேர்ந்த அமாவாசை என்பவரின் மகன் வினோத் குமார் (வயது 30) என்பது தெரியவந்தது. இவரது வீட்டில் உள்ளவர்கள் ஏற்கனவே 20 ஆடுகளை பராமரித்து வந்த நிலையில் மேலும் 2 ஆடுகளை வாங்குமாறு வினோத்குமாரிடம் ரூ.20 ஆயிரத்தை கொடுத்துள்ளனர். ஆனால் அந்த பணத்தை வினோத்குமார் பதுக்கி வைத்துக் கொண்டு மேய்ச்சலுக்கு கட்டியிருந்த ஆட்டை திருடி சென்றதை ஒப்புக்கொண்டார்.
இதனையடுத்து வினோத்குமாரை போலீசார் கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பின்னர் 2 ஆடுகளையும் மீட்டு ஆட்டின் உரிமையாளரான பூங்கொடியிடம் ஒப்படைத்தனர்.