வியாசர்பாடி-செங்குன்றத்தில் நள்ளிரவில் வாகனங்களை அடித்து நொறுக்கிய ரவுடி கும்பல்; 8 பேருக்கு அரிவாள் வெட்டு


வியாசர்பாடி-செங்குன்றத்தில் நள்ளிரவில் வாகனங்களை அடித்து நொறுக்கிய ரவுடி கும்பல்; 8 பேருக்கு அரிவாள் வெட்டு
x

வியாசர்பாடி மற்றும் செங்குன்றத்தில் நள்ளிரவில் ரவுடிகள் வாகனங்களை அடித்து நொறுக்கியதுடன், 8 பேரை அரிவாளால் வெட்டினர். இதனால் பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர்.

சென்னை

சென்னை வியாசர்பாடி பி.வி. காலனி 1-வது தெரு, 11-வது தெரு மற்றும் 14-வது தெருக்களில் நேற்று முன்தினம் நள்ளிரவில் அரிவாள், பட்டாக்கத்திகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் 4 மோட்டார் சைக்கிள்களில் ஹெல்மட் அணிந்தபடி வந்த 8 பேர் கொண்ட ரவுடி கும்பல் சாலையில் நிறுத்தி இருந்த கார்கள், மினிவேன்கள், மோட்டார்சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்களை அடித்து உடைத்தனர். அங்கிருந்த கடைகளையும் அடித்து நொறுக்கினர்.

இதில் 3 கார்கள், 4 மினி வேன்கள், 5 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 3 கடைகள் சேதம் அடைந்தன. ரவுடி கும்பலின் அட்டகாசத்தை கண்டு அங்கிருந்த பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர். வீடுகளுக்குள் சென்று பொதுமக்கள் கதவை பூட்டிக்கொண்டனர்.

மேலும் அந்த கும்பல் எம்.கே.பி. நகரைச் சேர்ந்த கோபி (வயது 48), பி.வி. காலனி 1-வது தெருவை சேர்ந்த லோகநாதன் (32), புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த நவீன் (24) ஆகியோரை அரிவாளால் வெட்டி விட்டு மோட்டார்சைக்கிளில் தப்பினர்.

செல்லும் வழியில் எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் கொடுங்கையூர் கண்ணதாசன் நகர் 32-வது பிளாக்கை சேர்ந்த இம்ரான் கான் (32) மற்றும் அவருடைய மனைவி காயத்ரி (28) ஆகியோரையும் அரிவாளால் வெட்டினர். பின்னர் அந்த கும்பல் சாலையில் ஆயுதங்களை உரசியபடி நெருப்பு பொறி பறக்க மூலக்கடை வழியாக செங்குன்றம் நோக்கி தப்பிச்சென்றனர். ரவுடி கும்பல் வெட்டியதில் இவர்கள் 5 பேரும் தலை, தோள்பட்டை, கை உள்ளிட்ட இடங்களில் காயம் அடைந்தனர்.

இதுபற்றி அறிந்த எம்.கே.பி. நகர் போலீஸ் உதவி கமிஷனர் தமிழ்வாணன், எம்.கே.பி. நகர் , கொடுங்கையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அம்பேத்கர், சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று காயம் அடைந்த 5 பேரையும் மீட்டு சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புளியந்தோப்பு போலீஸ் துணை கமிஷனர் ஈஸ்வரன் உத்தரவின்பேரில் எம்.கே.பி. நகர் போலீஸ் உதவி கமிஷனர் தமிழ்வாணன் தலைமையில் தனிப்படை போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து ரவுடி கும்பலை தேடி வருகின்றனர்.

இதேபோல் செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் அங்காள ஈஸ்வரி கோவில் தெருவைச் சேர்ந்த கார்த்திகேயன்(24), அஜித்(24) மற்றும் சார்லஸ்(26) ஆகிய 3 பேரும் நேற்று முன்தினம் இரவு அங்காள ஈஸ்வரி கோவில் திடலில் நின்று பேசி கொண்டிருந்தனர்.

அப்போது 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட ரவுடி கும்பல் இவர்கள் 3 பேரையும் அரிவாளால் வெட்டினர். பின்னர் அங்கு நிறுத்தி இருந்த அ.தி.மு.க. பிரமுகர் பி.கே.பாலன் என்பவரது கார் உள்பட 3 கார்களை அடித்து நொறுக்கினர். இதில் கார் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தன.

இதுபற்றி தகவல் அறிந்ததும் உதவி கமிஷனர் முருகேசன், செங்குன்றம் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ரவுடிகள் வெட்டியதில் காயம் அடைந்த 3 பேரையும் மீட்டு சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வியாசர்பாடியில் ரகளையில் ஈடுபட்ட அதே ரவுடி கும்பல்தான் செங்குன்றத்திலும் அட்டகாசத்தில் ஈடுபட்டனரா? என செங்குன்றம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story