இளங்கன்றுகள் நடுவதன் மூலம் புதிய தென்னந்தோப்பு உருவாக்கலாம்


இளங்கன்றுகள் நடுவதன் மூலம் புதிய தென்னந்தோப்பு உருவாக்கலாம்
x

முதிர்ந்த மரங்களின் மத்தியில் இளங்கன்றுகள் நடுவதன் மூலம் புதிய தென்னந்தோப்பு உருவாக்கலாம் என பட்டுக்கோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் மாலதி தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை, அ

பட்டுக்கோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் மாலதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

முதிர்ந்த பழைய வேர்கள்

தொடக்க காலத்தில் குறைந்த அளவே காய்கள் காய்க்கும் தன்மை பெற்ற தென்னை மரங்கள் 8 முதல் 12 ஆண்டுகள் வளர்ச்சிக்குப்பின் அதிக எண்ணிக்கையில் காய்களை உற்பத்தி செய்வதோடு காய்க்கும் தன்மை தொடர்ந்து ஒரே சீராகவும் இருக்கும். இந்த நிலை 35 முதல் 45 ஆண்டுகள் வரை தொடரவும் செய்கின்றது. தென்னை மரம் 45 அல்லது 50 ஆண்டுகள் முதிர்ந்து வளர்ந்த பின்பு அதன் குலைகளில் காணப்படும் காய்களின் எண்ணிக்கையில் சிறிய சரிவு ஏற்படும்.

மேலும், மரம் 60 வயதை தாண்டி பல ஆண்டுகள் தொடர்ந்து வளரும் ்போது காய்களின் எண்ணிக்கை குறைந்து காணப்படும். இயற்கையாக ஏற்படும் இந்த நிலைக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. முதிர்ந்த பழைய வேர்கள் மற்றும் மரத்தின் தண்டுப்பகுதி, இலை மட்டை ஆகியவற்றில் காணப்படும் திசுக்களில் ஏற்படும் மாற்றங்களே இதற்கான முக்கிய காரணங்கள் ஆகும்.

இளங்கன்றுகள்

வயது முதிர்ந்த மரங்களில் விளைச்சல் குறைந்து பொருளாதார சரிவு தோன்ற ஆரம்பிக்கும் போது இம்மரங்களின் அடியில் காணப்படும் இடைவெளிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட தரமான இளங்கன்றுகளை நட்டு வளர்ப்பது பலன் தருவதாக அமையும்.

நன்கு வளர்ச்சியடைந்த மரங்களின் மத்தியில் சூரிய வெளிச்சம் நேரடியாகவும் அதிகமாகவும் கிடைக்கின்றது. அத்துடன் உயரமாக வளர்ந்துவிட்ட மரங்களின் ஓலைகளின் இடையே தேவையான அளவு சூரிய வெளிச்சம் ஊடுருவி தடை இன்றி கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. இந்தப் பகுதியில் மண்ணின் அடியில் வேர்களில் அடர்த்தியும், போட்டியும் குறைந்தே காணப்படும்.

புதிய தென்னந்தோப்பு

இந்த பகுதியை தேர்ந்தெடுத்து கன்றுகளை 3 அடி அகலம், 3 அடி நீளம், 3 அடி ஆழம் அளவுள்ள குழிகளில் நடலாம். இவ்வாறு நன்கு வளர்ச்சி அடைந்த மரங்களில் மத்தியில் ஒன்று வீதம் நடும்போது நடப்பட்ட கன்றுகளின் எண்ணிக்கையும், பெரிய மரங்களின் எண்ணிக்கையும் சமமாக அமைகின்றது.

உதாரணமாக 400 பெரிய மரங்கள் உள்ள தோப்பில் 400 புதிய கன்றுகள் நட முடியும். இந்த கன்றுகள் வளர்ச்சி அடையும்போது வரிசை மாறாத இளம் மரங்களை உடைய தென்னந்தோப்பு உருவாவதை காண முடியும்.

பொருளாதாரச்சரிவு

பெரிய மரங்களின் காய்ப்புத்திறன் குறைந்து பொருளாதாரச் சரிவு ஏற்படும் நிலை ஏற்பட்டால் அம்மரங்களை வெட்டி விடுவதன் மூலம் இளம் மரங்கள் நன்றாக காய்த்து தொடர்ந்து பலன் கொடுக்கும். இவ்வாறு வளர்ச்சி அடைந்த மரங்களின் அடியில் இளம் கன்றுகளை நட்டு வளர்ப்பதன் மூலம் புதிய தோப்பு உருவாகி தொடர்ந்து வருமானம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story